கேரளாவில் பலரது உயிரைக் காப்பாற்ற உதவி செய்த ஆம்புலன்ஸ் டிரைவர் பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அரசியலில் குதித்து தமிழக மக்களுக்கு சேவை செய்வேன் என்று தற்போது பலரும் கூறி வருகிறார்கள். தங்களுக்கு சிறிது ‘பிரபலம்’ என்ற அந்தஸ்து கிடைத்து விட்டாலே போதும் மக்கள் தங்களை பெரியநபர் என்று நினைத்து அரசியலில் வெற்றிபெற செய்துவிடுவார்கள் என்பது பலரின் அரசியல் கனவாக உள்ளது. சினிமா நடிகர்கள் என்றால் அது அரசியலில் நுழைய தகுதி கிடைத்துவிட்டது என்றும் நினைத்துக்கொள்கிறார்கள்.
நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரசியலானாலும் சரி, சினிமாவானாலும் சரி அங்கு உள்ள பொதுமக்களின் கண்ணோட்டம் தமிழகத்தை விட மிகவும் வித்தியாசமாகவே உள்ளது. குறிப்பாக சினிமாதுறையை சேர்ந்தவர்கள் அங்கு அரசியலில் வெற்றிபெறுவது என்பது மிகவும் கடினமான செயல்.
அதே சமயம் மக்கள் சேவை செய்பவர்களை அரசியலில் எளிதாக வெற்றி பெற செய்துவிடுவார்கள். பாமரர்கள் அரசியலில் கொடிகட்டி பறக்க முடியும் என்பதற்கு கேரளாவில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. சமீபத்தில் அங்கு நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆம்புலன்ஸ் டிரைவரை அவர்கள் வெற்றி பெற செய்து அதை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றவர் நஜீப். மலப்புரம் மாவட்டம் காளிக்காவு பஞ்சாயத்து தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். இவர் அங்கு செயல்படும் மேலகாளிக்காவு வியாபாரி விவசாயி ஏகோபன சமீதி சார்பில் செயல்படும் ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வந்தவர்.
இவர் தனது பணிக்காலத்தில் ஏராளமானவர்களின் உயிரை காப்பாற்றியவர். இவர் வெற்றிபெற்ற வார்டு 20 ஆண்டுகளுக்கு மேலாக கம்யூனிஸ்டு கோட்டையாக திகழ்ந்தது ஆகும். மக்களின் நன்மதிப்பை பெற்றதால் நஜீப்பை மக்கள் அந்த வார்டில் இருந்து தேர்ந்தெடுத்தனர்.
நஜீப் தேர்தல் பிரசாரத்தின் போது 2 வாக்குறுதிகளை மட்டும்தான் மக்களுக்கு கொடுத்தார். எந்த நேரத்தில் கூப்பிட்டாலும் மக்கள் பணிக்காக ஓடோடி வருவேன். உணவு, தூக்கம் என்று எல்லாவற்றையும் மறந்து மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற நோக்கில் பணியாற்றுவேன் என்பதுதான் அது.
ஏற்கனவே தனது ஆம்புலன்ஸ் சேவை மூலம் அதை பலமுறை அவர் நிரூபித்துள்ளதால் மக்கள் அவரை பஞ்சாயத்து தலைவராக தேர்தெடுத்து விட்டனர். இதுபற்றி நஜீப் கூறியதாவது:-
நான் ஆம்புலன்சில் நோயாளிகளை ஏற்றிக் கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்லும்போது அவர்களை அங்கு அனுமதித்ததுடன் எனது கடமை முடிந்தது என்று நினைக்கமாட்டேன். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வேன். அவர்கள் பூரண குணம் அடைந்துவிட்டனர் என்ற பிறகுதான் எனக்கு திருப்தி ஏற்படும்.
நான் காளிக்காவு பகுதியில் இருந்து கோழிக்கோடு ஆஸ்பத்திரிக்கு ஒரு இதய நோயாளியை 70 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்களில் கடந்து அழைத்துச் சென்றேன். அவர் குறித்த நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்றதால் அவரை டாக்டர்கள் குணப்படுத்திவிட்டனர். அதே சமயம் மின்சாரம் தாக்கி உயிருக்கு ஊசலாடிய ஒரு குழந்தையை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றும் அந்த குழந்தை உயிரிழந்துவிட்டது. இந்த 2 சம்பவங்களும் எனது வாழ்க்கையில் மறக்கமுடியாதது.இவ்வாறு அவர் கூறினார்.
தற்போது பஞ்சாயத்து தலைவராகி விட்டதால் அவரால் ஆம்புலன்ஸ் பணியை தொடரமுடியவில்லை. இருந்தாலும் யாருக்காவது அவசர உதவி என்றால் ஆம்புலன்சை இயக்க நஜீப் தயாராகவே இருக்கிறார்.