விவேக்கின் ஜாஸ் சினிமா நிறுவனம் தொடர்பான சர்ச்சையை தொடர்ந்து சத்யம் சினிமாஸ் தியேட்டர்கள், அலுவலகங்கள் என அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 33 இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் வீடுகளை குறிவைத்து வருமானவரி துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் அதிரடி சோதனை நடத்தினர்.
சசிகலாவின் அண்ணன் மகனான விவேக் ஜெயா தொலைக்காட்சியின் தலைமை நிர்வாக அதிகாரியாக உள்ளார். ஜாஸ் சினிமா என்கிற நிறுவனத்தையும் அவர் நடத்தி வருகிறார். சசிகலா உறவினர்கள், நண்பர்களின் வீடுகளில் நடந்த சோதனையின் போது நுங்கம்பாக்கத்தில் உள்ள விவேக்கின் வீடும் தப்பவில்லை.
வேளச்சேரியில் உள்ள ஜாஸ் சினிமா நிறுவனத்திலும் சோதனை நடந்தது. சத்யம் குழுமத்திடமிருந்து ஜாஸ் சினிமா நிறுவனத்தை விவேக் வாங்கி இருந்தார். அதற்கு முன்னர் லக்ஸ் சினிமா என்ற பெயரில் இயங்கி வந்த அந்த நிறுவனத்தின் பெயர் விவேக்கிற்கு கைமாறிய பின்னரே ஜாஸ் சினிமா என்று மாற்றப்பட்டது.
இதனை வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக கூறப்பட்டது. இது தொடர்பாக அப்போது நடத்தப்பட்ட சோதனையில் ஆவணங்கள் சிக்கி இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது. இதுபற்றி வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தனர்.
ஜாஸ் சினிமா வாங்கப்பட்டதில் முறைகேடு நடந்திருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கூடுதல் ஆவணங்களை திரட்ட முடிவு செய்தனர். இதனை தொடர்ந்து சத்யம் குழுமத்தில் சோதனை நடத்த வருமானவரி துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதன்படி சென்னையில் உள்ள சத்யம் சினிமா தியேட்டர்களில் இன்று சோதனை நடத்தப்பட்டது. பெரம்பூரில் ஸ்பெக்ட்ரம் மாலில் எஸ்-2 என்ற பெயரில் 5 சினிமா தியேட்டர்கள் உள்ளன.
இங்கு இன்று காலையில் புகுந்த வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து தியேட்டர்களில் டிக்கெட் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்த தியேட்டர்கள் உள்ள ஸ்பெக்டரம் மாலில் ஏராளமான வணிக நிறுவனங்களும் செயல்பட்டு வருகின்றன.
இதனால் காலையிலேயே அந்த வளாகம் பரபரப்பாக காணப்படும். இன்று காலையில் நடந்த வருமானவரி சோதனை அங்கு கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த தியேட்டர்கள் தொடர்பான அலுவலகங்கள் மற்றும் தியேட்டர்களின் அதிபர் வீடுகளிலும் சோதனை நடந்தது. இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கி இருப்பதாக தெரிகிறது.
செங்குன்றத்தில் உள்ள தியேட்டர் அதிபர்களின் வீட்டில் நடந்த சோதனையிலும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சத்யம் சினிமா தியேட்டர்கள் மட்டுமின்றி, மேலும் சில நிறுவனங்களிலும் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது. பட்டேல், மார்க், மிலன், கங்கா பவுண் டேஷன் ஆகிய குழுமங்களிலும் வருமானவரி சோதனை நடந்தது. இந்த சோதனைகளின் பின்னணி விவரங்கள் என்ன? என்பதை வருமான வரி துறையினர் இன்று மாலையில் வெளியிட உள்ளனர்.
சென்னையில் 21 இடங்களிலும், வெளி மாவட்டங்களில் 12 இடங்களிலும் சோதனை நடந்து வருகிறது. சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து வருமான வரி அதிகாரிகள் நடத்திய சோதனை தொடர்பான பரபரப்பு அடங்காத நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதன் தொடர்ச்சியாக மீண்டும் சோதனையை தொடங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.