போராட்டம் நடத்தும் செவிலியர்கள் மீது அடக்குமுறையை ஏவுவதா?: மு.க.ஸ்டாலின் கண்டனம்

249 0

உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை நடுத்தெருவிற்கு வந்து போராடவிட்டிருப்பதாக அமைச்சர் மற்றும் முதல்-அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

நோயால் வாடும் ஏழை- எளிய, நடுத்தர மக்களுக்கு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சையும், ஆறுதலும் அளித்திடும் செவிலியர்கள் அ.தி.மு.க. அரசின் அலட்சியத்தால் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்துக்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டம் நடத்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள்.

2015ஆம் ஆண்டு மருத்துவத் தேர்வாணையம் மூலம் நியமிக்கப்பட்ட 11 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செவிலியர்களை இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் நிரந்தரம் செய்யாமல், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர். விஜயபாஸ்கர் தன் மீதுள்ள வருமான வரித்துறை விசாரணைகளை சரிசெய்வதற்காக அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கிறார். பணியாளர் விவகாரங்களைக் கவனிக்க வேண்டிய மருத்துவத்துறை அதிகாரிகளும், சுகாதாரத்துறைச் செயலாளரும் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக அரசு மருத்துவமனைகள் மற்றும் சுகாதர நிலையங்களில் பணியாற்றி வருபவர்களுக்கு, ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியமே இன்றுவரை வழங்கப்பட்டு வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது.

செவிலியர்களுக்கு 34 ஆயிரம் ரூபாய் ஊதியம் கொடுக்க வேண்டும் என்று 2016ல் உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்தும், இன்னும் 7 ஆயிரம் முதல் 10 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுவது, இந்த அரசுக்கு நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி எந்தக் கவலையும் இல்லை என்பதையும், சட்டத்தின் ஆட்சியை மீறும் ஆட்சியாளர்களுக்கு, அதிகாரிகளும் விரும்பித் துணை போகிறார்கள் என்பதையும் வெளிப்படுத்தி, தமிழகத்தின் ‘கருப்பு அத்தியாயமாக’ அமைந்திருக்கிறது.

அமைச்சர் விஜயபாஸ்கர், 2 ஆண்டுகளாக பணி நிரந்தரம் ஆகாமல் வாழ்வாதாரத்திற்காகப் போராடிக் கொண்டு இருக்கும் செவிலியர்களை குறைகளை கேட்கக்கூட நேரமில்லாமல், ஆர்.கே.நகருக்கு மீண்டும் தேர்தல் நிதி திரட்டுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

எனவே, உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சையில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை இப்படி நடுத்தெருவிற்கு வந்து போராடவிட்டிருக்கும் “அமைச்சர்” மற்றும் முதல்-அமைச்சருக்கும் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற உடனடியாக அரசு துறைச்செயலாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களுக்கு எல்லாம் தலைவராக இருக்கும் தலைமைச் செயலாளர் இனியும் வேடிக்கை பார்க்காமல், செவிலியர்களை அழைத்துப் பேசி உடனடியாக அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அதை விடுத்துப் போராடும் செவிலியர்கள் மீது அடக்கு முறையைக் கட்டவிழ்த்து விட்டு, பத்திரிக்கையாளர்களை சந்திக்க விடாமல் மிரட்டும் போக்கை காவல்துறை மூலம் பின்பற்றக்கூடாது என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Leave a comment