எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் பொது எதிரணி ஆகியவற்றுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது. அந்தவகையில் பொது இணக்கப்பாடு ஒன்றை இப்பேச்சுவார்த்தைகளின் ஊடாக ஏற்படுத்த முடியும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் பொது எதிரணியும் இணைந்து செயற்படுவது குறித்து தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வந்த போதிலும் இதுவரையில் உறுதியான தீர்மானம் ஒன்று எட்டப்படாத நிலையிலேயே அனைத்து பேச்சுவார்த்தைகளும் முடிவடைந்துள்ளன.
இந் நிலையில் இன்று மீண்டும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளனர். இந்த பேச்சுவார்த்தைகளில் பொது இணக்கப்பாடு ஒன்றினை எட்டுவதற்கு முயற்சிப்பதாகவும், அதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் இரு தரப்பினரும் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறுகையில், பொது எதிரணியினரை இணைத்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியாக நாம் பலமான கட்சியாக களமிறங்க வேண்டும் என்பதே எமது பிரதான நோக்கமாகும். அதற்கான முயற்சிகளையே நாம் முன்னெடுத்து வருகின்றோம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதுடன் இப்போது பல்வேறு விடயங்களில் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் இணைந்து செயற்படுவதற்கான உடன்படிக்கைகள், நிபந்தனைகள் என்பவற்றில் இரு தரப்பினரும் இணக்கம் காணும் பல்வேறு காரணிகள் உள்ளன. எவ்வாறு இருப்பினும் நாளை ( இன்று) இடம்பெ றும் இரு கட்சிகளுக்கு இடையிலான சந்திப்பில் இறுதியான இணக்கப்பாடு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்க்கின்றோம் என்றார். பொது எதிரணியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன கூறுகையில்,
உடன்படிக்கை ரீதியில் இணக்கம் எட்டப்படும் விடயங்களில் சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது. இதுவரை இடம்பெற்ற சந்திப்புகளில் பல்வேறு இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் கொள்கை ரீதியில் இன்னும் இரு தரப்பினர் மத்தியிலும் இணக்கம் எட்டப்படவில்லை. கொள்கை ரீதியில் இணக்கம் எட்டப்படுவது குறித்து பொது எதிரணியின் சகல உறுப்பினர்களுடன் இணைந்து கலந்துரையாடி வருகின்றோம். அனைவரதும் இணக்கப்பாட்டிற்கு அமையவே தீர்மானம் எடுக்க வேண்டும். எவ்வாறு இருப்பினும் நாளைய ( இன்று) சந்திப்பு இரு தரப்பினருக்கும் இணக்கம் காணக்கூடிய வகையில் அமையும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.