ஹபீஸ் சயீதை மீண்டும் கைது செய்யுங்கள்: பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

267 0

சர்வதேச தீவிரவாதி ஹபீஸ் சயீதை மீண்டும் கைது செய்யுங்கள் அல்லது அதற்கான பின்விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தானுக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2008 மும்பை தாக்குதலின் முக்கிய குற்றவாளி ஹபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு 10 மாதங்கள் வீட்டுக் காவலில் வைத்திருந்தது. அவருக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யாததால் லாகூர் உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில் அவர் அண்மையில் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு அமெரிக்கா உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தது. அவரை கைது செய்ய வலியுறுத்தியது.

இந்த விவகாரம் தொடர் பாக அமெரிக்க அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

பாகிஸ்தான் மண்ணில் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்க மாட்டோம் என்று அந்த நாட்டு அரசு உறுதி அளித்துள்ளது. ஆனால் ஐ.நா. சபையால் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீதுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்காதது மிகுந்த வருத்தமளிக்கிறது.

லஷ்கர்-இ-தொய்பா நிறுவனரான ஹபீஸ், அமெரிக்கர்கள் உட்பட நூற்றுக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவித்துள்ளார். அவரை மீண்டும் கைது செய்ய வேண்டும். இல்லையெனில் அதற்கான பின் விளைவுகளைப் பாகிஸ்தான் சந்திக்க நேரிடும்.

பாகிஸ்தானுடன் ஆக்கப்பூர்வமான நட்புறவை அமெரிக்கா விரும்புகிறது. ஆனால் ஹபீஸ் சயீது விடுதலை செய்யப்பட்டிருப்பது அந்த நாடு தவறான பாதையில் செல்வதாக கருதுகிறோம்.

இவ்வாறு சாரா சாண்டர்ஸ் தெரிவித்தார்.

Leave a comment