ஆர்.கே.நகர் இடைதேர்தல்: திமுகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு

242 0

ஆர்.கே.நகர் இடைதேர்தலில் திமுகவை ஆதரிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இன்று நடந்த அவசர ஆலோசனை கூட்டத்தில் திமுகவை ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

“ஆர்.கே.நகர் இடைதேர்தல் குறித்து முடிவெடுக்க அவசரக்கூட்டமாக இந்தக்கூட்டம் கூட்டப்பட்டது.

இந்த கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

மத்தியில் ஆளும் ஆட்சி கொடுத்த வாக்குறுதி எதையும் நிறைவேற்ற வில்லை. மாறாக கார்ப்பரேட்டுகளை ஆதரிக்கவும் , பெருமுதலாளிகளை வளர்க்கும் முயற்சியில் தான் உள்ளனர். அவர்களுக்கு பல்லாயிரம் கோடி வங்கிக்கடன் தரப்படுகிறது. அவர்கள் கடனை கட்டாமல் ஏமாற்றினாலும், கடன்களை தள்ளுபடி செய்து மேலும் கடன் அளிக்கப்படுகிறது.

ஆனால் விவசாயிகள், மாணவர்கள் வாங்கிய கடனை வசூலிக்க தனியார் ஏஜன்ஸி மூலம் அடியாட்களை வைத்து தாக்கும் நிலையும் அதனால் அவமானம் தாளாமல் விவசாயிகள், மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்ளும் நிலையை பார்க்கிறோம்.

தமிழகத்தில் நடக்கும் ஆட்சி அதிமுக ஆட்சி என்ற நிலை மாறி அனைத்திந்திய மோடி திராவிட முன்னேற்ற கழக ஆட்சியாக மாறிப்போனது. மாநில உரிமைகள் பறிக்கப்பட்ட போது அதை மாநில அரசு நெஞ்சை நிமிர்த்தி எதிர்க்காமல் தலை சாய்த்து வரவேற்கிறது. மாநில நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாக தலையிடுகிறார்.

அதையும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர். இப்படிப்பட்ட மோசமான ஆட்சிதான் தமிழகத்தில் நடந்துவருகிறது. அனைத்து துறைகளிலும் ஊழல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணத்தில் ஆர்.கே.நகர் இடைதேர்தலில் திமுக வேட்பாளரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரிப்பது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.”

இவ்வாறு முத்தரசன் தெரிவித்தார். இதன் மூலம் திமுகவை ஆதரிக்கும் கட்சிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

Leave a comment