யாழ். பல்கலைக்கழகத்தில் கொட்டும் மழைக்கு மத்தியிலும் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.மாவீரர்களின் எழுச்சி கீதங்கள் இசைக்க, பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள மாவீரர்களுக்கான நினைவிடத்தில் இந்த அஞ்சலி நிகழ்வுகள் இன்று காலை நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது தமிழ் மக்களின் விடுதலைக்காக களமாடி உயிர் நீத்த மாவீரர்களுக்கு இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், விரிவுரையாளர்கள், ஆசிரியர் சங்கத்தினர், ஊழியர்கள் எனப் பெருந்திரளானோர் மாவீரர் நினைவுத் தூபிக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.மாவீரர்கள் நினைவாக நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் பயன்தரு மரங்கள் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்க அம்சமாகும்.