தமிழ்மக்கள் ஒன்றுபட்டு நின்று மீண்டும் ஒருமுறை தமது ஒற்றுமையினை வெளிக்காட்டவேண்டிய காலகட்டமாக இன்று உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இந்த நாடு கடன்சுமையில் இருந்துவிடுபட்டு பொருளாதார ரீதியில் முன்னேற்றம்பெறவேண்டுமானல் இந்த நாட்டில் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் அரசியல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு சனிக்கிழமை மாலை நடைபெற்றது.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி, பேர்டினன்ட் மண்டபத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப் பேச்சாளருமான எம்.கே.சுமந்திரன், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.துரைராஜசிங்கம் உட்பட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோர் விளக்கமளித்தனர்.
அத்துடன் எதிர்காலத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலை எதிர்கொள்வது தொடர்பில் கருத்துகள் வெளியிடப்பட்டதுடன் பொதுமக்களினால் கேட்கப்பட்டகேள்விகளுக்கும் பதில்கள் வழங்கப்பட்டன.
இங்கு உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,
இன்று சமஸ்டி தொடர்பாக பலர் குழப்பகரமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நாட்டின் பல பகுதிகள் அந்நியர் ஆட்சியின் கீழ் இருந்தன. கூடுதலான பிரதேசங்கள் ஐக்கிய இராச்சியத்தின் கீழ் இருந்தன. காலப்போக்கில் சுதந்திரமடைந்தன. அதன்பின்னர் அருகருகில் இருந்த பகுதிகள் சிலதேவைகளைக்கொண்டு ஒன்றாக இணைந்து செயற்பட்டதுடன் தமது சொந்த நலன்களுக்காக பாதுகாப்பு உட்பட சில தேவைகளை தாங்களே உருவாக்கிக்கொண்டனர். இவ்வாறே சமஷ்டி உருவானது.
இந்த சமஷ்டிமுறை பல நாடுகளில் இருந்துவருகின்றது. வெவ்வோறு மொழிகள், கலாசாரங்களை பின்பற்றும் நாடுகள் இந்த சமஷ்டியில் உள்ள சிறப்புமுறைகளை தமது நாடுகளில் பின்பற்றுகின்றனர். இதனால் பல நாடுகளில் கூட்டாட்சி, சமஷ்டி ஆட்சிமுறைகள் ஏற்பட்டுள்ளன.
பெரும்பான்மையாக நாம் வாழும் பகுதிகளில் எங்களை நாங்களே ஆளும் சுயநிர்ணய உரிமை எங்களுக்கு உரித்தானதாகும். அவ்வாறான நிலையிலேயே சமஷ்டி முறையில் இறைமை மதிக்கப்படும். என்று தந்தை செல்வா குறிப்பிட்டிருந்தார். 1941ஆம் ஆண்டு தமிழ் காங்கிரசில் இருந்து பிரிந்து தந்தை செல்வா தமிழரசுக் கட்சியை ஆரம்பித்தார். அமரர் பொன்னம்பலம் அமைச்சர் பதவியினை ஏற்று அரசாங்கத்துடன் இணைந்து கொண்டார்.
1952 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தந்தை செல்வா சமஷ்டி கொள்கையை முன்வைத்து போட்டியிட்டபோது நாங்கள் படுதோல்வி அடைந்தோம். 1956 ஆம் ஆண்டு அந்த சமஷ்டி கொள்கையினை முன்வைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது சிறப்பான வெற்றியைப்பெற்றோம். மக்கள் பரிபுரணமாக சமஷ்டி கொள்கையினை ஆதரித்தார்கள்.
1972 ஆம் ஆண்டு அரசியல்சாசனம் உருவாக்கப்பட்டபோது எங்களது அதிகாரங்கள் ஆட்சியமைப்பு தொடர்பில் சில கருத்துகளை முன்வைத்தோம். அதில் நாங்கள் வெற்றிகாணவில்லை. 1978 ஆம் ஆண்டு இரண்டாவது அரசியல்யாப்பு உருவாக்கப்பட்டது. அதனையும் தாங்கள் விரும்பியவாறு செய்தார்கள். ஒற்றையாட்சி முறை 1975 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கப்பட்டது.
அதற்கு எதிராக நாங்கள் தொடர்ச்சியாக போராடி வந்திருக்கின்றோம். 1976 ஆம் ஆண்டு தமிழீழ பிரகடனத்தை செய்தோம். உள்ளக சுயநிர்ணய உரிமையினை நீங்கள் அங்கீகரிக்காவிட்டால் வெளியக சுயநிர்ணயத்தை கேட்பதைவிட வேறுவழியில்லை என்பதற்காக தமிழீழ பிரகடனத்தை செய்தோம்.
1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் வடகிழக்கில் 19 உறுப்பினர்களைக்கொண்ட தொகுதியில் 18இல் நாங்கள் வெற்றியீட்டினோம். கல்குடா தொகுதியினைத் தவிர அனைத்திலும் வெற்றிபெற்றோம். அங்கு சுமார் 256 வாக்குகளினால் தோல்வியடைந்தோம். பாராளுமன்றத்தில் இரண்டாவது பெரும்பான்மை கட்சியாக விளங்கினோம். அமரர் அமர்தலிங்கம் எதிர்க்கட்சி தலைவராக நியமிக்கப்பட்டார்.
அந்தவேளையில் இந்தியாவின் ஆதரவினைப்பெறுவதற்காக அமிர்தலிங்கம், இந்திய பிரதமர் இந்திராகாந்தியுடன் பேசியபோது தனிநாட்டு கொள்கையுடன் வந்தால் உங்களை ஆதரிக்கமுடியாது எனத்தெரிவித்தார். ஒருமித்த நாட்டுக்குள் சுயாட்சியினை கோரினால் எங்களது ஆதரவு உங்களுக்கு உண்டு என தெரிவித்தார்.
அவ்வாறான தீர்வு முன்வைக்கப்பட்டால் தனிநாட்டுக் கோரிக்கையினை கைவிடுவதாக அமிர்தலிங்கம் பகிரங்கமாக கூறினார். 1983 ஆண்டு இனக்கலவரம் ஏற்பட்டபோது இந்தியாவின் தலையீடு ஏற்படுவதற்கு ஒரு வாய்ப்பு உருவானது. இந்தியா தலையிட்டது. 1983,84ஆம்ஆண்டு காலப்பகுதியில் அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், நான் பல தடவைகள் இந்திரா காந்தியை சந்தித்துப்பேசினோம். தமிழர்களின் பிரச்சினைக்கு ஒரு தீர்வினை காணுவோம் என்ற நிலையேற்பட்டது.
இந்திரகாந்தி மறைந்த பின்னர் அவரது புதல்வர் ரஜீவ்காந்தி பிரதமர் ஆனபிறகும் அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. தமிழ் மக்களை ஒருபோதும் இந்தியா கைவிடாது என்ற வாக்குறுதியை அவர் தந்திருந்தார்.
இந்தியா – இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டது. 1987ஆம் ஆண்டு முதன்முறையாக மாகாணசபைகள் உருவாக்கப்பட்டன. வடகிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டன. ஒரு நியாயமான சுயாட்சி வழங்கப்பட்டது. ஆனால் தமிழர்களின் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமைந்திருக்காவிட்டாலும் ஒரு ஆரம்பகட்டமாக 13 ஆவது அரசியல் சட்டம் உருவாக்கப்பட்டது.
13 ஆவது அரசியல்சாசனம் ஊருவாக்குவது தொடர்பில் 1986 ஆம்ஆண்டு இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் கூட்டணிக்கும் இடையில் 15நாட்களுக்கு மேல் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டன. ஆனால் அது முழுமையான தீர்வாக அமையவில்லை.
அதனைத்தொடர்ந்து ரஜீவ்காந்திக்கு அமிர்தலிங்கம் கடிதம் ஒன்றை எழுதியதை தொடர்ந்து டெல்லிக்கு அழைக்கப்பட்டோம்.ஜே.ஆர்.ஜயவர்த்தன அழைக்கப்பட்டார். நான்கு தினங்களாக பேச்சுவார்தைகள் நடாத்தப்பட்டன. 13 ஆவது அரசியலமைப்பு சாசனத்தில் 12 திருத்தங்களை மேற்கொள்வதாக ஜனாதிபதி ஜே.ஆர்.எழுத்துமூலமான உறுதியை வழங்கினார்.
துரதிர்ஷ்டமாக இந்திய இராணுவத்திற்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் ஆரம்பித்த காரணத்தினால் எழுத்துமூலமான அந்த ஒப்பந்தத்தை அமுல்படுத்துவதற்கான சூழ்நிலையிருக்கவில்லை.
அதன் பிறகு 13வது திருத்த சட்டத்தில் பல திருத்தங்களை மேற்கொள்வதற்கு ஜனாதிபதிகளாக இருந்த பிரேமதாச, சந்திரிகா,ரணில் விக்ரமசிங்க,மகிந்த ராஜபக்ஸ ஆகிய ஜனாதிபதிகளின் காலப்பகுதிகளில் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் அவைகள் தோல்வியடைந்தன.
மகிந்த ராஜபக்ஸ காலத்தில் 2006ஆம்ஆண்டு சர்வகட்சி மாநாட்டில் உச்சபட்ட அதிகாரப்பகிர்வு வழங்கப்படவேண்டும் என தெரிவித்தார்.பல உறுதிமொழிகளை வழங்கினார்.2010ஆம்ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றியடைந்தார்.ஆட்சிக்குவந்தார்.அவரிடம் அரசியல் தீர்வு தொடர்பில் நடவடிக்கையெடுக்கவேண்டும்,மக்கள் எங்களை தெரிவுசெய்துள்ளார்கள்,அந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்படவேண்டும் என நாங்கள் அவரிடம் பேசியிருந்தோம்.
நீங்கள் எங்களுடன் நேர்மையாக பேசினால் உங்களது பல பிரச்சினைகளுக்கு தீர்வினைக்காணலாம் என்று கூறியிருந்தோம். தமிழ் மக்களுக்கு ஒரு அரசியல் தீர்வினை வழங்குவது எங்களுக்க மட்டுமல்ல உங்களுக்கும் தேவையென்று மகிந்தவிடம் கூறியிருந்தேன். எங்களது தீர்மானங்களை 2011 ஆம் ஆண்டு வாய்மூலமாகவும் எழுத்துமூலமாகவும் வழங்கியிருந்தோம். ஆனால் அவை இழுத்தடிக்கப்பட்டது.
சர்வகட்சி மாநாட்டை கூட்டி எங்களை அழைத்தபோது நாங்கள் மறுத்துவிட்டோம். ஒரு தீர்மானமும் எடுக்காத நிலையில் ஏனைய கட்சிகளுடன் கலந்துரையாடத் தயாரில்லை தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நீங்களும்பேசி ஒரு தீர்வினை எட்டியபின்னர் இந்த மாநாட்டில் கலந்துகொள்கின்றோம் என்பதை மகிந்தவிடம் தெரிவித்தேன். அவர்கள் ஒரு திகதி வழங்கினார்கள் நாங்கள் சென்றோம் அவர்கள் வரவில்லை.பேச்சுவார்த்தை முறிந்தது.
அந்தகாலகட்டத்தில் இந்தியா பலவிதமான தலையிடிகளை கொடுத்தது.பலவிதமான வாக்குறுதிகளை இந்தியாவுக்கு வழங்கியிருந்தார். 13 ஆவது திருத்தசட்டத்தினை பலப்படுத்தி அர்த்தபுஸ்டியான தீர்வொன்றை காண்பதற்கான முடிவுகள் எட்டப்பட்டன. ஆனால் எதுவும் நடக்கவில்லை.
2014 ஆம்ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் ஒரு பொதுவேட்பாளர் மகிந்தவினை எதிர்த்துபோட்டியிட்டார். அந்தவேளையில் மகிந்தவுக்கு தக்க பதில் வழங்கப்பட்டது. அதற்கு தமிழ் மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
ஒருமித்த நாட்டுக்குள் நாங்கள் வரலாற்று ரீதியாக வாழ்ந்துவரும் பகுதிகளில் எமது பாதுகாப்பினை உறுதிசெய்து கௌரவத்தினை பாதுகாத்து தங்களது சுதந்திரத்தினை தங்களது கடமையினை உறுதிப்படுத்தக்கூடிய அதிகாரங்களையே நாங்கள் கோருகின்றோம். பல்வேறு நாடுகளில் உள்ள ஆட்சிமுறையின் அடிப்படையில் ஒரு தீர்வினையே நாங்கள் கோருகின்றோம்.
தற்போதைய அரசாங்கம் ஒரு அரசியல்சாசனத்தை உருவாக்கும் பணியை மேற்கொண்டுவருகின்றது. அது தொடர்பில் மிகவும் கவனமாகவும் நிதானமாகவும் சர்வதேச சமூகம் எமது நிலைப்பாட்டை புரிந்துகொள்ளும் வகையில் சிங்கள மக்கள் மத்தியில் எவ்வித சந்தேகத்திற்கும் இடமளிக்காதவகையில் பிரிபடாத ஒருமித்த நாட்டுக்குள் எமது வரலாற்றுகாலமாக வாழும் இடங்களில் சுயாட்சியை கேட்டு எமது நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றோம்.
முதலில் எங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையிருக்கவேண்டும். எங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லாமல் வேறு ஒருவரை குறைகூறுவதில் எந்த பிரயோசனமும் இல்லை.
இந்த அரசியல்தீர்வானது ஜனாதிபதிக்கும் தேவை, பிரதமருக்கும் தேவை. இந்த நாட்டின் கடன்சுமைகளை இந்த நாட்டினால் தாங்கமுடியாத நிலையிருக்கின்றது. இந்த நாட்டில் பெறப்படும் வருமானங்களில் 70 வீதமான வருமானம் கடன் சுமைகளை குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் இருந்து இந்த நாடு விடுவிக்கப்படும் நிலையேற்படவேண்டுமானால் இந்த நாட்டின் பொருளாதாரம் முன்னேறவேண்டுமானால் இந்த நாட்டில் உள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும். இந்த நாட்டில் நிரந்தரமான சமாதானம் ஏற்படவேண்டும்.
பிரக்கப்படாத ஒருமித்த நாட்டுக்குள் தீர்வினைப்பெறுவதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை. தமது இறைமையின் அடிப்படையில் தங்களது உரிமைகளை பயன்படுத்தும் வகையில் தீர்வுவழங்கப்படவேண்டும்.’
மாகாணசபையின் அதிகாரங்களில் மத்திய அரசாங்கம் தலையிடமுடியாது. மீளப்பெறமுடியாது. அவ்வாறு செய்வது என்றால் விசேட ஒழுங்குகள் இருக்கவேண்டும். இந்திய அரசியலமைப்பில் உள்ள சமஸ்டியாட்சியானது ஒற்றையாட்சிக்குள் இல்லை. அங்குள்ள முதலமைச்சர் அந்த மாநிலங்களை ஆட்சிபுரிகின்றனர்.
வடகிழக்கு இணைப்பு தொடர்பில் ஒரு முடிவுகாணப்படவேண்டும்.வடகிழக்கு இணைப்பு மேற்கொள்ளப்பட்டபோது தற்காலிக இணைப்பாகவே கருதப்பட்டது. சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
துரதிஷ்டவசமாக இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இறந்தார். இறந்திருக்காவிட்டால் அவரது காலப்பகுதியில் இலங்கையில் தமிழர்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டிருக்கும். அந்தவாய்ப்பினை நாங்கள் இழந்தோம்.
வரலாற்று ரீதியாக வடகிழக்கில் தமிழ்பேசும் மக்கள் வாழ்ந்துவருகின்றனர். அதன்அடிப்படையிலேயே வடகிழக்கு இணைக்கப்பட்டது. இந்தவேளையில் தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டியது அவசியமாகும்.
இரண்டு சமூகங்களும் தமது எதிர்கால நலனைக்கருதி தமது பிரதேசங்களை பாதுகாத்து உரிமையுடன் வாழவேண்டுமானால் விட்டுக்கொடுப்புகளை செய்து ஒரு இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும்.அதற்கான முயற்சிகளை நாங்கள் மேற்கொள்ளவேண்டும்.
அடிப்படை விடயங்களை நாங்கள் விட்டுக்கொடுக்கமுடியாவிட்டாலும் சில விடயங்களை மற்றவர்களும் விட்டுக்கொடுக்கவேண்டும் நாங்களும் விட்டுக்கொடுக்கவேண்டும்.கிழக்கு மாகாணத்தில் உள்ள மக்களுக்கு பாதிப்பில்லாத வகையில் அந்த நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கவேண்டும்.
வடகிழக்கில் வடமாகாணத்தை தவிர்ந்து கூடுதலாக தமிழ் மக்கள் வாழும் பகுதியாக மட்டக்களப்பு மாவட்டம் உள்ளது.இந்த மாவட்டத்தில் வாழும் 75வீதமான மக்கள் தமிழ் மக்கள்.இன்றைய சூழலில் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றாக செயற்படவேண்டும்.
1956 ஆம்ஆண்டு தொடக்கம் ஒன்றுபட்டு நின்றதன் காரணமாகவே இன்று நாங்கள் இந்த அந்தஸ்தை உடைந்துள்ளோம்.இந்த சந்தர்ப்பத்தினை நாங்கள் இழக்ககூடாது.இந்த வாய்ப்பினை நாங்கள் இழக்ககூடாது.மீண்டும் ஒருமுறை இவ்வாறான சந்தர்ப்பம் வரும் என்று எதிர்பார்க்கமுடியாது.
இன்று இரண்டு தேசிய கட்சிகளும் ஒன்றாக இணைந்துள்ளது.பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிறைவேற்றினால் சர்வஜனவாக்கெடுப்பில் நாங்கள் வெற்றிபெறுவோம்.
விரைவில் இங்கு உள்ளூராட்சிமன்ற தேர்தல் நடைபெறும். நாங்கள் ஒருமித்து ஒற்றமையாக நிற்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.