93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் திகதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை வேட்புமனுக்களை ஒப்படைக்க முடியும் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
உடனடி தடையேதும் இல்லாத 93 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்துவது என கடந்த சனிக்கிழமை கூடிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்தது.
இதற்கமைவாக இன்றையதினம் வேட்புமனுக்களை பொறுப்பேற்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் பணி இன்றைய தினத்திலிருந்து இடம்பெறும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டுப்பணத்தை டிசம்பர் மாதம் 13ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை செலுத்தமுடியும்.
புதிய உள்ளூராட்சி மன்ற சட்டத்தின் படி சுயேட்சை குழுவின் வேட்பாளர் ஒருவருக்கு 5,000 ரூபாய் வீதமும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியொன்றின் வேட்பாளர் ஒருவருக்கு 1,500 ரூபாய் வீதமும் கட்டுப்பணம் செலுத்துதல் வேண்டும்.