திருகோணமலையில் பொலிஸ் கெப் வாகனத்தை மோதி விட்டு, நிறுத்தாமல் சென்ற இராணுவ கெப் வாகனத்தின் மீது, துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று, நேற்றிரவு (26) 8.30 அளவில் பதிவாகியுள்ளது.
திருகோணமலை – 10ம் கட்டைப் பகுதியில் பொலிஸ் கெப் வாகனத்துடன் மோதிய வாகனம் ஒன்று நிறுத்தாமல் செல்வதாக, ரொட்டவெவ பொலிஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, அந்த வாகனத்தை ரொட்டவெவ பொலிஸ் நிலையத்துக்கு முன்னால், மறித்த வேளை, அங்கும் நிறுத்தாமல் செல்ல முற்பட்டுள்ளனர்.
எனவே குறித்த கெப் வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, மொறவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
இது அனுராதபுரம் – சாலியபுர இராணுவ முகாமிற்கு சொந்தமான வாகனம் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை, இராணுவ கெப் வாகனத்தின் சாரதி, மதுபோதையில் இருந்ததாகவும், அதில் ஜந்து பேர் பயணித்ததாகவும் அனுராதபுரம் சாலியபுர இராணுவ முகாமில் கடமையாற்றும் உயரதிகாரியொருவரே இவ் வாகனத்தை அனுமதியின்றி திருகோணமலைக்கு கொண்டு சென்றுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலும், குறித்த வாகனத்தைச் செலுத்திச் சென்ற 48 வயதுடைய இராணுவ வீரர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் இன்று (27) அவரை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக மொறவெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.