ஐ.தே.கவின் இலக்கை நோக்கிய பயணம் நேற்று ஆரம்பமானது

251 0

மாநகர, நகர மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை இலக்குவைத்து, கட்சியைப் பலப்படுத்தும் நடவடிக்கைகள், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில், நேற்று (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

“அரச ஆட்சியில் காணும் மாற்றம்”, “பலம்மிக்க பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதல்”, “புதிய தேர்தல் முறைமை” ஆகிய பிரதான மூன்று கருப்பொருள்களில், இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

முதலாவது கூட்டம், நாவலப்பிட்டி கிரான்ட் மண்டபத்தில் நேற்று ​(26) பிற்பகல் இடம்பெற்றது. அதன் தொடர்ச்சியாக, மற்றுமொரு கூட்டம், கொலன்னாவை மங்களபாய மண்டபத்தில் நேற்று மாலை நடத்துவதற்கு ஏற்பாடாகியிருந்தது. அந்தக் கூட்டங்களுடன், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களை இலக்காகக் கொண்டு, கட்சியின் செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் கட்சி நடவடிக்கை எடுத்துள்ளதாக அறியமுடிகின்றது.

முதலாவது கூட்டத்தில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரையுடன், நாடளாவிய ரீதியில் உள்ள சகல மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 26 கூட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனையின் பேரில், நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் வழிகாட்டலில், கட்சியின் தொழில்நுட்பப் படையணியால், இந்தக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன” என்று அப்படையணியின் பணிப்பாளர் நாயகம் சுதத் சந்திரசேகர தெரிவித்தார்.
இதேவேளை, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கை, எதிர்வரும் வாரம் ஆரம்பிக்கப்படுமென, அக்கட்சி அறிவித்துள்ளது.

Leave a comment