வளர்ப்பு பிள்ளைகளாக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டவர்கள் பெற்றோரை தேடி வருகிறார்கள்!

305 0
இலங்கையிலிருந்து 1980களில் வளர்ப்பு பிள்ளைகளாக வெளிநாடு கொண்டு செல்லப்பட்டவர்கள், தங்களுடைய உண்மையான பெற்றோரை கண்டறிவதற்காக உயிரியல் தரவு உள்ளடங்கிய மரபணு (DNA) வங்கியொன்றை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ள நிலையில், அதற்கு இலங்கை மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளிடமிருந்து ஒத்துழைப்பு கிடைத்துள்ளது.

இலங்கை குடும்ப திட்டம் (Sri lanka Family Project ) என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நோக்கம் 1980களில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்லப்பட்ட சுமார் 4000 பிள்ளைகளையும் அவர்களின் உண்மையான பெற்றோரையும் சந்திக்க வைப்பதாகும்.

குறிப்பாக குறித்த காலப் பகுதியில் வளர்ப்பு பிள்ளைகளாக எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் தொடர்பான அநேகமான தகவல்கள் போலியானவை என கண்டறியப்பட்டுள்ள நிலையில், பெற்றோரை தேடி வரும் பிள்ளைகள் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது.

இலங்கை குடும்ப திட்டம் என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டத்தின் நிறுவனரான பீற்றர் றொவான்ட் வன் விலன்ட் தலைமையிலான குழுவொன்று இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பை பெறுவதற்காக அண்மைக்காலமாக இலங்கையில் தங்கியுள்ளன.

இந்த திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவது தொடர்பாக நெதர்லாந்திலுள்ள இலங்கை தூதுவர் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சருடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.

இதுவரையில் நெதர்லாந்தில் வசிக்கும் சுமார் 500 பிள்ளைகள் தங்கள் மரபணுகளை வழங்க பதிவு செய்துள்ளதாகவும் இதனால் தங்கள் திட்டம் எதிர்காலத்தில் மேலும் வெற்றியளிப்பதாக அமையும் என்றும் அவர் நம்பிக்கையும் வெளியிட்டிருக்கின்றார் .

இலங்கையிலுள்ள தாய்மார்களுக்கு இதுபற்றி அறிவூட்டி அவர்களின் மரபணுவை பெற்றுக் கொள்வதற்கு எதிர்காலத்தில் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து இந்த வேலைத் திட்டத்தை நடைமுறைப்பபடுத்த பீற்றர் றொவான்ட் வன் விலன்ட் எதிர்பார்க்கின்றார்.

“நான் மாத்திரம் அல்ல நெதர்லாந்து உட்பட ஐரோப்பிய நாடுகளில் இந்த பிரச்சனை காரணமாக பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள பெற்றோர் எம்மை நன்றாக பராமரிக்கின்றார்கள். ஆனால் எமது மனதில் உண்மையான பெற்றோர் யார் ? என்பது தொடர்பான அழுத்தம் உள்ளது.” என தங்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த திட்டம் தொடர்பாக அவர் தெளிவுபடுத்துகின்றார்.

வெளிநாட்டவர்களுக்கு வளர்க்க கொடுக்கப்பட்ட சில பிள்ளைகள் அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த சமயத்தில் பத்திரிகைகளில் வெளியிட்ட அறிவிப்புகளை படித்து சுமார் 50 தாய்மார்கள் வரை அவர்கள் தங்கியிருந்த விடுதிகளுக்கு தேடி வந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.

“எத்தனை பேரை கண்டு பிடிக்க முடியும் என உறுதியாக கூற முடியாது. இருப்பினும் இந்த திட்டத்தின் மூலம் எங்களில் பலருக்கு பெற்றோரை கண்டறிய முடியும் என பெரு நம்பிக்கை உண்டு.

எனது ஆவணங்களில் நான் வாதுவ பிரதேசத்தில் பிறந்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த ஆவணத்திலுள்ள பல தகவல்கள் பொய்யானது. இதனால் எனது பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை ” என்று அவர் தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்துகின்றார்.

“இந்த பிள்ளைகள் மீண்டும் இலங்கைக்கு வருவதன் மூலம் நாட்டிற்கு பெரும் நன்மை கிடைக்கும்” என்கின்றார் சுகாதார அமைச்சரான டாக்டர் ராஜித சேனாரத்ன.

தான் சந்தித்த பிள்ளைகள் உயர் கல்வியை கற்று நல்ல உத்தியோகத்தில் இருப்பதாகவும் பெற்றோரை கண்டறிவதன் மூலம் அவர்கள் இலங்கைக்கு வந்து செல்லும் போது நாட்டிற்கும் அவர்களின் உதவி கிடைப்பதாக இருக்கும் என்றும் டாக்டர் ராஜித சேனரத்ன கூறுகின்றார் .

“மரபணு தரவுகளின் பாதுகாப்பு மற்றும் உண்மை தன்மை 100 வீதம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். இதற்கேற்ப நவீன தொழில்நுட்ப முறைகளை பயன்படுத்த எதிர்பார்க்கின்றோம்.” என்கின்றார் மற்றுமொருவரான டபனி தோமஸ்.

1980 ஆரம்ப காலத்தில் இலங்கையிலிருந்து வளர்ப்பு பெற்றோரால் நெதர்லாந்துக்கு எடுத்துச் செல்லப்பட்ட இவராலும் இதுவரையில் உண்மையான பெற்றோரை கண்டு பிடிக்க முடியவில்லை.

“உத்தேச தரவு களஞ்சியம் ஏற்படுத்தப்பட்டால் இலங்கையிலிருந்து வளர்ப்பதற்கு எடுத்துச் செல்லப்பட்ட பிள்ளைகள் உலகில் எந்த பகுதியில் இருந்தாலும் அவர்களின் தாய்மாருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முடியும்.” என்ற நம்பிக்கையும் அவர் வெளியிட்டார் .

நெதர்லாந்திலிருந்து தமது பெற்றோரை தேடி வரும் பிள்ளைகள் தொடர்பாக இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் ஜோன்னி டொர்னேவர்ட் ( Joanne Dornewaard) சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்னவிற்கும் சந்திப்பொன்றும் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிள்ளைகளுக்கு மரபணு பரிசோதனை வசதிகளை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பிரிவு ஏற்படுத்தி தர முடியும் என இந்த சந்திப்பின் போது சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார்.

Leave a comment