ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக 9 பேர் கொண்ட குழுவை டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ள நிலையில், டிசம்பவர் 4-ந்தேதி அந்த குழு சென்னை வர உள்ளது.
ஜெயலலிதா முதல்- அமைச்சராக இருந்த போது 2 முறை வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் தொகுதி அவரது மறைவுக்கு பிறகு காலியாக இருந்தது.
கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் பணப்பட்டுவாடா புகார் காரணமாக ரத்து செய்யப்பட்டது.
தற்போது ஐகோர்ட்டு உத்தரவை ஏற்று வருகிற டிசம்பர் மாதம் 21-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.நாளை (திங்கட்கிழமை) வேட்பு மனுதாக்கல் தொடங்குகிறது. தண்டையார்பேட்டை மண்டல அலுவலகத்தில் காலை 11 மணிக்கு தொடங்கி பிற்பகல் 3 மணி வரை மனுதாக்கல் செய்யலாம்.
இதற்கிடையே தேர்தல் பிரசாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் கமிஷன் விதித்துள்ளது. வீடு வீடாக சென்று மேற்கொள்ளும் பிரசாரத்தை இனிமேல் காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை மட்டுமே மேற்கொள்ள முடியும். இந்த நேரத்தையும் குறைக்கலாமா? என்பது பற்றி தேர்தல் கமிஷன் ஆலோசித்து வருகிறது.
ஆர்.கே.நகர் தேர்தல் முன்னேற்பாடுகள், பாதுகாப்பு விஷயங்கள், தொகுதியில் எடுக்க வேண்டிய புதிய நடவடிக்கைகள் குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையர் வீடியோ கான்பரன்சிங் மூலம் தமிழக தேர்தல் அதிகாரிகள் மற்றும் போலீஸ் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனையின் போது கடந்த முறை நடந்த தவறுகள் எதுவும் இந்த தேர்தலில் மீண்டும் நடைபெறக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.
சென்னை மாவட்டம் முழுவதும் எந்த கடையிலும் டோக்கன் மூலம் பொருட்கள் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி டோக்கன் முறையில் வியாபாரம் நடத்தினால் கடை உரிமையாளர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களுக்கு கட்டுப்பாடு விதிக்கவும், வாகன சோதனையை தீவிரப்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கப் பணம் யார் கொண்டு சென்றாலும் அதற்கு கணக்கு காட்ட வேண்டும் இல்லையெனில் அந்த பணத்தை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்.கே.நகர் தொகுதியில் வசிக்கும் மக்களின் வாகனங்களுக்கு அடையாள அட்டை வழங்கி கண்காணிக்க வேண்டும். கட்சி கொடி தலைவர்களின் படங்களுடன் வரும் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மற்ற தொகுதியில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் உரிய காரணம் இல்லாமல் உள்ளே செல்லக் கூடாது. தகுந்த காரணம் சொல்ல வேண்டும் என்பன உள்பட பல்வேறு புதிய நடைமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிக்கு துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.வேட்பு மனு தாக்கல் நாளை முதல் தொடங்குவதால் தேர்தல் பார்வையாளர்களும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வர உள்ளனர். இதற்காக 9 தேர்தல் பார்வையாளர்களை டெல்லி தலைமை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.
பொது பார்வையாளர்கள், செலவினம், காவல் பார்வையாளர்கள் என 9 பேர் கொண்ட குழு டிசம்பர் 4-ந்தேதி ஆர்.கே.நகர் வர உள்ளது. வேட்பு மனுதாக்கல் முடிந்த பிறகு தங்களது பணிகளை பார்வையாளர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கவும், கண்காணிக்கவும், பொது பார்வையாளர்கள் பணியாற்றுவார்கள். வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் பிரசாரம் தேர்தல் செலவுகளை செலவின பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.
பதட்டமான வாக்குச்சாவடிகள், முறைகேடுகள், வன்முறைகளை தடுக்க காவல் பார்வையாளர்கள் கண்காணிப்பார்கள்.ஓட்டுப்பதிவு நெருங்கும் சமயத்தில் கூடுதல் பார்வையாளர்களை நியமித்து கண்காணிக்கவும் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
தேர்தல் பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் நேற்று மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இன்று 2-வது நாளாக தண்டையார்பேட்டை 4-வது மண்டல அலுவலகத்தில் தேர்தல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
அதில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சுபத்காந்த், லதா, தேர்தல் நடத்தும் அலுவலர் வேலுச்சாமி, போலீஸ் கூடுதல் கமிஷனர் ஜெயராமன், இணை கமிஷனர் சுதாகரன், மண்டல அலுவலர் விஜயகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.கூட்டத்தில், பதட்டமான வாக்குசாவடிகள் எவை, பாதுகாப்பு பணியை எவ்வாறு செய்வது, போலீசாரின் எண்ணிக்கை, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், பணப்பட்டுவாடாவை தடுப்பது ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.