ஆர்.கே.நகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்யும் என்று மதுசூதனன் கூறியுள்ளார்.
ஆர்.கே.நகரில் கடந்த முறை இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டபோது அ.தி.மு.க. 3 அணிகளாக பிரிந்து கிடந்தது.
அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் டி.டி.வி.தினகரன், அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை சார்பில் ஜெ.தீபா ஆகியோர் போட்டியிட்டனர்.
எதிர்க்கட்சியான தி.மு.க. மருதுகணேசை வேட்பாளராக நிறுத்தியது. பா.ஜனதா சார்பில் இசை அமைப்பாளர் கங்கை அமரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளராக லோகநாதன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலைக் கோட்டுதயம் ஆகியோரும் சுயேட்சைகளும் களத்தில் இருந்தனர். ஆனால் இந்த முறை காட்சிகள் மாறிவிட் டன.
பிரிந்து கிடந்த இரு அ.தி.மு.க. அணிகள் இணைந்து விட்டன. அந்த அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்துள்ளது. இதனால் வேட்பாளராக இருந்த தினகரன் அ.தி.மு.க. பெயர், சின்னத்தை பயன் படுத்த முடியாது.
ஆனால் ஆர்.கே.நகரில் மீண்டும் போட்டியிடுவேன் என்று தினகரன் அறிவித்துள்ளார். வருகிற 29-ந்தேதி அவர் வேட்பாளராக அறிவிக்கப்படுகிறார்.
ஆர்.கே.நகரில் தி.மு.க. வேட்பாளராக மருதுகணேஷ் மீண்டும் போட்டியிடுவார் என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
அ.தி.மு.க. வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்பட வில்லை. வேட்பாளரை தேர்வு செய்வதற்காக அ.தி.மு.க. ஆட்சி மன்ற குழு கூட்டம் நாளை (திங்கட் கிழமை) காலை ராயப்பேட்டையில் உள்ள தலைமைக் கழகத்தில் நடைபெறுகிறது.
அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்கிறார்கள். இதில் அ.தி.மு.க. வேட்பாளர் முறைப்படி தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படுகிறார்.
வேட்பாளராக மதுசூ தனன் மீண்டும் நிறுத்தப்படுவார் என்று கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் இவர் 95 சதவீதம் பிரசாரத்தை முடித்து விட்ட நிலையில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. ஏற்கனவே வாக்காளர்களை சந்தித்து விட்டதால் இந்த முறை தேர்தல் பணியும் ஓட்டு வேட்டையும் சுலபமாக இருக்கும்.
அவர் ஆர்.கே.நகர் தொகுதியைச் சேர்ந்த மண்ணின் மைந்தர். மேலும் கட்சி வேட்பாளருக்கு அங்கீகார கடிதம் அளிக்கும் அதிகாரம் அவர் வசம் உள்ளது. எனவே அவரை வேட்பாளராக நிறுத்தும் வாய்ப்பு உள்ளது.
ஆனால் மதுசூதனன் முதுமை காரணமாக சுறு சுறுப்பாக பணியாற்ற முடியாது என்பதால் புதுமுகத்தை நிறுத்தலாமா? என்றும் ஆலோசனை நடக்கிறது.
ஆர்.கே.நகரில் நாடார், தாழ்த்தப்பட்டோர், மீனவர் சமுதாயத்தினர் கணிசமாக வசிக்கிறார்கள். எனவே அவர்களை கவரும் வகையில் வேட்பாளர் தேர்வு இருக்கும் என்று கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் தொகுதி அ.தி.மு.க. மண்டல தலைவர் கார்த்திகேயன், முன்னாள் கவுன்சிலர் காளியப்பன், வட சென்னை மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ராஜேஷ் ஆகியோர் பெயர்கள் அடிபடுகிறது.
இந்த நிலையில் அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் இன்று ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர் சிறப்பு முகாமை பார்வையிட்டார். அப்போது அவரிடம் ஆர்.கே.நகர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மீண்டும் பேட்டியிடுவீர்களா? என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
ஆர்.கே.நகர் தொகுதியில் யார் போட்டியிடுவது என்பதை கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அவைத் தலைவரின் பணி கூட்டத்துக்கு தலைமை தாங்குவது மட்டுமே ஆகும். இவ்வாறு அவர் கூறினார்.