சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு 11 மணியிலிருந்து பலத்த காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. சுமார் 10 நாள்களுக்கு வெளுத்து வாங்கிய மழை சிறிது காலம் ரெஸ்ட் எடுத்தது. இதனால் சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் காய்ந்தது. எனினும் அவ்வப்போது லேசான மழையும் பெய்தது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் கடலோர மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் வானிலையில் லேசான மாற்றம் தெரிந்தது. மேக மூட்டமான வானம், குளிர்ந்த காற்று என வானிலை மாறியது.
இதையடுத்து நேற்று காலை முதல் மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், முகப்பேர், நெற்குன்றம், நுங்கம்பாக்கம், அரும்பாக்கம், அண்ணா நகர், அம்பத்தூர், தாம்பரம், குரோம்பேட்டை, சோழிங்கநல்லூர், ராயப்பேட்டை, கேளம்பாக்கம், ஈசிஆர், சௌகார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது.
நேற்று இரவு 11 மணி முதல் மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. சென்னையின் எழும்பூர், நுங்கம்பாக்கம், அகரம், பல்லாவரம், சைதாபேட்டை, மீனம்பாக்கம், தாம்பரம், கிண்டி, தாம்பரம், கோடம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் இரவு முழுவதும் மழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தின் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்தது.