ஸ்ரீலங்கா சுதத்திர கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்கேற்பது தொடர்பில் தீர்மானிக்க, ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதுபோல் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தரப்பினர் ஆகியோர் இன்றும் தொகுதி அமைப்பாளர் கூட்டங்களை ஏற்பாடு செய்திருந்தனர்.
சுதந்திர கட்சியின் அக்மீமன தொகுதி அமைப்பாளர் கூட்டம், தொகுதி அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பதிரனவின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது கருத்துரைத்த ரமேஸ் பதிரனவின் ஆண்டு நிறைவு நிகழ்வில் பங்குகொள்ளும் தீர்மானத்தை உறுப்பினர்களே மேற்கொள்ளுமாறு கோரினார்.
இதன்போது பல உறுப்பினர்கள் சுதந்திர கட்சியின் நிகழ்வில் தாங்கள் பங்குகொள்ள போவதில்லை என்று தெரிவித்தனர்.
இதனிடையே, ஹோமாகம ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தனவின் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது சுதந்திர கட்சியின் நிகழ்வில் பங்குகொள்வதில்லை என்று தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
இதனிடையே, நேற்று இடம்பெற்ற இரண்டு தொகுதி அமைப்பாளர் கூட்டங்களில் குருணாகலில் இடம்பெறவுள்ள நிகழ்வில் கலந்துகொள்வதில்லை என தீர்மானம் எடுக்கப்பட்டது.
மத்துகம மற்றும் ரத்கம தொகுதிகளிலேயே இவ்வாறு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
எவ்வாறாயினும் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் சிலர், தாம் கட்சியை புதிய பாதைக்கு இட்டுச் செல்வதாக குறிப்பிட்டனர்.