மும்பை தாக்குதல் தீவிரவாதி ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் மீண்டும் கைது செய்து சிறையில் அடைக்காமல் விட்டால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவு பாதிக்கப்படும் என வெள்ளை மாளிகை எச்சரிக்கை விடுத்துள்ளது.
மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை பாகிஸ்தான் அரசு கடந்த ஜனவரி மாதம் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்தது. பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அவருக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் இல்லை எனக்கூறிய பஞ்சாப் மாகாண கோர்ட்டு சயீத்தை விடுவிக்க உத்தரவிட்டது.
இதனையடுத்து, ஆதரவாளர்களின் வரவேற்புக்கு மத்தியில் சிறையிலிருந்து வெளியே வந்த ஹபீஸ் சயீத், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை கடுமையாக தாக்கி பேசினார்.
ஐ.நா சபையால் சர்வதேச தீவிரவாத என அறிவிக்கப்பட்ட ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட்ட நடவடிக்கை இந்தியாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, மும்பை தாக்குதலின் முக்கிய ஒருங்கிணைப்பாளரான ஹபீஸ் சயீத், பாகிஸ்தானின் அண்டை நாடுகளுக்கு எதிராக பயங்கரவாத செயல்களை கட்டவிழ்த்து விடுவதாக குற்றம் சாட்டியிருந்தது.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அலுவலகமான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, “சயீத் விடுவிக்கப்பட்டது அவர் மீதான குற்றத்தை போதிய ஆதாரங்களுடன் பாகிஸ்தான் அரசு நிரூபிக்கத் தவறியதையே காட்டுகிறது. ஆனால், தீவிரவாதத்தி்ற்கு எதிராக பாகிஸ்தான் போராடுவதாக வாதாடுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், “ஹபீஸ் சயீத்தை மீண்டும் கைது செய்து உறுதியான வகையில் சிறை தண்டனை அளிக்கப்படாமல் இருந்தால் அது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் தாக்கத்தை ஏற்படுத்தும். சர்வதேச அளவில் பாகிஸ்தானுக்கு இருக்கும் செல்வாக்கு மீதும் இந்த தாக்கம் எதிரொலிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.