“மதுரை விழாவுக்கு ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது வேதனை, எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தாலும் ஆர்.கே.நகர் தேர்தல் வெற்றிக்காக ஒற்றுமையாக உழைப்போம்” என்று மைத்ரேயன் எம்.பி. கூறினார்.
அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில், இரு அணிகள் இணைந்தாலும், மனங்கள் இணையவில்லை என்று குறிப்பிட்டு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தினார். இது அ.தி.மு.க.விற்குள் உட்கட்சி பூசல் இருப்பதையே காட்டியது.
இந்த நிலையில் இரட்டை இலை சின்னம் கிடைத்ததை கொண்டாடும் வகையில் மதுரையில் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட அமைச்சர்கள் கலந்து கொண்டனர். விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கவில்லை. முறையான அழைப்பு விடுக்காததே அவர் பங்கேற்காததற்கு காரணம் என்று கூறப்பட்டது. இந்த சம்பவத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சூழ்நிலையில் அ.தி.மு.க. எம்.பி. மைத்ரேயன் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார். அங்கு அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு மைத்ரேயன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னர் பன்வாரிலால் புரோகித்தை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினேன். 21-ந் தேதி நடைபெற உள்ள தமிழ் இசை சங்கம் நடத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுத்தேன். மற்றபடி அரசியல் ரீதியாக ஒன்றும் இல்லை. இரட்டை இலை சின்னம் மீட்கப்பட்டதில் எங்கள் முயற்சியும் இருக்கிறது. அ.தி.மு.க.வில் அனைவரும் ஒற்றுமையாக இருந்து மீதியிருக்கும் 3½ ஆண்டுகால ஆட்சியை நிறைவு செய்ய வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்.
கடந்த காலம் கசப்பானதாக இருந்தாலும் வருங்காலம் வசந்த காலமாக இருக்க வேண்டும். ஆர்.கே.நகர் தேர்தலில் வென்று 2021-ம் ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற வேண்டும் என்றே நான் எண்ணுகிறேன். மதுரையில் நடந்த விழாவுக்கு ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை அழைக்காதது வேதனை அளிக்கிறது. அவருக்கு முறைப்படி அழைப்பு விடுத்து இருக்க வேண்டும்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை இனி பொதுச்செயலாளர் பதவியே கிடையாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி தான். இந்த சம்பவம் தொடர்பாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமர்ந்து பேச வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்தால் தான் நம்மை யாரும் தோற்கடிக்க முடியாது. எங்களுக்குள் சண்டை, சச்சரவு இருந்தாலும் தேர்தல் வெற்றிக்காக ஒற்றுமையாக உழைப்போம்.
டி.டி.வி.தினகரனிடம் கட்சி இல்லை. ஆர்.கே.நகர் தேர்தலை பொறுத்தவரையில் அவர் சுயேச்சை வேட்பாளர் தான். பா.ஜ.க. பற்றியும் எங்களுக்கு கவலையில்லை. நாங்கள் தான் நம்பர் ஒன்றாக இருக்கிறோம். இந்த தேர்தலில் எங்கள் வெற்றி உறுதி செய்யப்பட்ட ஒன்று. எங்களுக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததையும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையும் ஒன்றாக பார்க்கக்கூடாது. கோர்ட்டு உத்தரவுப்படி தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.