ஆர்.கே நகர் இடைத்தேர்தல்: அ.தி.மு.க வேட்பாளர் யார்?

322 0

ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரை முடிவு செய்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து அ.தி.மு.க.வின் ஆலோசனைக் கூட்டம் நாளை நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதா மறைந்ததால் காலியான சென்னை ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவிக்கை வெளியிட்டது. ஆனால், வாக்காளர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கொடுக்கப்பட்டது கண்டறியப்பட்டதால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பின்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். ஆனால் போலி வாக்காளர்களை நீக்கிய பிறகே இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்று தி.மு.க. சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

ஆர்.கே.நகர் தொகுதியில் 45 ஆயிரத்து 819 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டு விட்டனர் என்று தேர்தல் ஆணையம் கூறியதைடுத்து அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது. அத்துடன், ஏற்கனவே உத்தரவிட்டபடி டிசம்பர் 31-ம் தேதிக்குள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தவேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து, டிசம்பர் 21-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. டிசம்பர் 24-ம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

தி.மு.க சார்பில் மருது கணேஷ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு விடுதலை சிறுத்தைகள் மற்றும் முஸ்லிம் லீக் போன்ற கட்சிகள் ஆதரவளித்துள்ளன.

இந்நிலையில், இடைத்தேர்தல் வேட்பாளரை அறிவிக்க நாளை அ.தி.மு.க ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. அக்கட்சியின் தலைமையகத்தில் நாளை காலை 11.30 மணிக்கு நடக்கும் கூட்டத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

முன்னர் அறிவிக்கப்பட்ட மதுசூதனனே வேட்பாளராக மீண்டும் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. ஜெயலலிதா நினைவு தினத்தை ஒட்டி அறிவிக்கப்பட்ட பேரணி தொடர்பாகவும் கூட்டத்தில் ஆலோசிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

Leave a comment