விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து வீரகாவியமான மாவீரர்களுக்கு உணர்வு பூர்வ அஞ்சலி செலுத்தும் மாவீரர் நாளான கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதி அஞ்சலி நிகழ்வுகளுக்காக முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் மாவீரர் துயிலுமில்லம் புத்துணர்வு பெற்று வருகிறது.
யுத்தத்தின் பின்னர் மக்கள் மீள்குடியேறிய காலத்தில் தேராவில் துயிலுமில்லம் இராணுவத்தால் சுபீகரிக்கப்பட்ட நிலையில் துயிலுமில்லத்தில் குறித்த ஒரு பகுதி இராணுவ முகாமுக்கு வெளியில் காணப்பட்டது.
இந்நிலையில் குறித்த பகுதியை மாவீரர்களின் பெற்றோர் உறவுகள் இளைஞர்கள் என பலரும் கலந்துகொண்டு துப்பரவு பணிகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்நிலையில் எதிர்வரும் கார்த்திகை மாதம் இருபத்தேழாம் திகதி அரசியல் கலப்படமற்ற உறவுகளின் உணர்வுபூர்வ நிகழ்வாக இடம்பெறும் இந்நிகழ்வில் தமது பிள்ளைகள் உறவுகளை இங்கு விதைத்தவர்கள் அனைவரையும் உணர்வாளர்கள் பொதுமக்கள் அனைவரையும் அஞ்சலி செலுத்த ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
பரந்தன் முல்லைத்தீவு வீதியில் அமைந்துள்ள தேராவில் கிராமத்தில் கடந்த 1997 ம் ஆண்டு கரும்புலி மாவீரர் அங்கயற்கண்ணி உட்ப்பட 5 மாவீரர்களின் நினைவு கற்கள் திரைநீக்கம் செய்யப்பட்டதோடு ஆரம்பிக்கப்பட்ட இத்துயிலுமில்லத்தில் சுமார் 10 000 மாவீரர்களின் நினைவுக்கற்கள் வித்துடல்கள் விதைக்கப்பட்டு தொடர்ச்சியாக மாவீரர் தினம் அனுஸ்ரிக்கப்பட்டு வந்தது.
இறுதியாக 2008 ஆம் ஆண்டு அஞ்சலி நிகழ்வோடு யுத்த சூழல் காரணமாக மக்கள் இடம்பெயர்ந்து சென்று மீல்குடியேரியபோது துயிலுமில்லம் உடைக்கப்பட்டு இராணுவ முகாமாக காணப்பட்டது இந்நிலையில் 2008 ஆம் ஆண்டுக்கு பின்னர் இவ்வாண்டு மக்கள் உணர்வு பூர்வமாக இந்நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.