உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு உடந்தையாக இருப்பதாக முன்னிலை சோஷலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்னம் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஹட்டனில் இன்று இடம்பெற்ற கட்சியின் கூட்டத்தில் கலந்து கொண்ட பின் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கான உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றினைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே ஆகும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபாவே பொறுப்பு கூறுகிறார்.
ஏனெனில் தேர்தல் சம்பந்தமாக முக்கிய முடிவுகளை மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா எடுப்பதனால் தேர்தல் தாமதம் ஏற்படுவதற்கும் அவரே பொறுப்பு கூற வேண்டிய நிலையில் உள்ளார்.
அவர் பொறுப்பு கூற வேண்டும் தான் ஆனால் இதற்கு முழு பொறுப்பும் ஏற்க வேண்டியது அரசாங்கமே. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை குறித்த நேரத்திற்கு வைக்க முடியாமல் போனதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன.
ஆனால் உண்மையான காரணம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கும், ஒன்றினைந்த எதிர்க்கட்சியினருக்கும் இடையில் நடக்கும் முரண்பாடே ஆகும்” என அவர் மேலும் சுட்டிக்காட்டினர்.
மேலும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்தி வைக்கும் ஜனநாயக விரோத செயலிற்கு பலர் ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர் என்றார்.