‘சைட்டம்’ தனியார் மருத்துவக் கல்லூரியை மூடுவது குறித்த அரசின் செயற்பாடுகளில் தாம் விழிப்புடன் இருப்பதாக, அரச மருத்துவ பல்கலைக்கழக மாணவர்களின் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், மேற்படி சங்கத்தின் பேச்சாளர் டொக்டர் நிமல் கருணாசிறி இதனைத் தெரிவித்தார்.
நீண்டகாலமாக சர்ச்சைக்கும் பல்வேறு சச்சரவுகளுக்கும் ஆளாகி வந்த சைட்டம் பிரச்சினை, அக்கல்லூரியை மூடிவிடுவதாக அரசு அறிவித்ததையடுத்து ஓய்ந்துள்ளது. சுமார் பத்து மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் அரச மருத்துவ பல்கலைக்கழகங்கள் இயங்க ஆரம்பித்துள்ளன.
இந்நிலையில், அரசின் வாக்குறுதியைத் தாம் நம்புவதாகத் தெரிவித்திருக்கும் நிமல், அது குறித்து அரசு எடுக்கவுள்ள நடவடிக்கைகள் குறித்து தாம் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அதற்கான நடவடிக்கைகளை அரசு உரிய காலத்தில் எடுக்க முன்வராத பட்சத்தில் மீண்டும் பிரச்சினைகள் ஆரம்பிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.