முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு – வடக்கு முதல்வர் அறிவிப்பு!

337 0

வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட 2015ம் ஆண்டின் 3ஆம் இலக்க வடக்கு மாகாண முன்பள்ளிக் கல்வி நியதிச் சட்டத்தின் 19ஆம் பிரிவுக்கு அமைவாக மேற்படி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு மாதாந்தக் கொடுப்பனவாக ரூபா 6000/- வழங்கப்படுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

வடமாகாணசபையால் உருவாக்கப்பட்ட முன்பள்ளிகளுக்கான நியதிச் சட்டத்தில் குறிப்பிட்டது போன்று இவ் ஆசிரியர்களுக்கான கொடுப்பனவு ரூபா 6000 ஆக இருக்க வேண்டும் எனவும் இக்கொடுப்பனவுகள் 2018ஆம் ஆண்டு தை மாதம் முதலாம் திகதி முதல் வழங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாண முன்பள்ளி ஆசிரியர் சங்கமும் இன்னும் பல முன்பள்ளி ஆசிரியர்களும் இதுபற்றி தொடர்ந்து கோரிய வண்ணம் உள்ள நிலையில் கல்வி அமைச்சின் செயலாளரின் அறிக்கையின் படி 01.01.2018 முதல் இச்சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளவதற்கும் வடமாகாண கல்வி அமைச்சில் பதிவு செய்யப்பட்டுள்ள முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ரூபா 6000்/- வீதம் ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்குவதற்கான நிதி பிரதிப் பிரதம செயலாளர், நிதி அவர்களிடமிருந்து கல்வி அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எனவே இக்கொடுப்பனவு தொடர்பில் முன்பள்ளி ஆசிரியர்கள் கலக்கமடையத் தேவையில்லை என்பதனை அறியத்தருகின்றேன்.

Leave a comment