போராட்டத்தின் பலன் சாந்திபுரம் மக்களுக்கு வரட்சி நிவாரணம்!

301 0

மன்னார் நகர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் மக்கள் வரட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என அண்மையில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்ததைத் தொடர்ந்து அவர்களுக்கு வரட்சி நிவாரணப் பொருட்கள் வழங்கப்படத் தொடங்கியுள்ளன.

அண்மையில் மன்னார் மாவட்டத்தில் வரட்சி நிலவி வந்ததைத் தொடர்ந்து இப் பகுதிகளில் வரட்சியால் பாதிப்படைந்த பல கிராம மக்களுக்கு வரட்சி நிவாரணம் வழங்கப்பட்டு வந்தன.

ஆனால் மன்னார் நகரை அண்டிய சாந்திபுரம் கிராம மக்களும் வரட்சியால் பாதிக்கப்பட்ட  போதும் இங்கு வாழும் 462 குடும்பங்களில் வெறுமனே 60 குடும்பங்களுக்கு மட்டும் வரட்சி நிவாரணம் வழங்கப்பட்டு ஏனையோர் விடுபட்டு இருந்தனர்.

இதனால் பாதிப்பு அடைந்த இப் பகுதி மக்கள் அண்மையில் மன்னார் பிரதேச செயலகத்துக்கு முன்பாக வரட்சி நிவாரணம் கோரி பெரும் ஆர்பாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

பின் மன்னார் பிரதேச செயலாளர் எம்.பரமதாஸின் உறுதிமொழியைத் தொடர்ந்து  போராட்டம் கைவிடப்பட்ட நிலையிலேயே  பாதிப்பு அடைந்தவர்களுக்கு  வரட்சி நிவாரணம்  நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது.

உறுதிமொழிக்கேற்ப மன்னார் பிரதேச செயலாளர் எம்.பரமதாஸ் செயல்பட்டமைக்கு  மக்கள் நன்றிகளையும் தெரிவித்தனர்.

இவ் வரட்சி நிவாரணம் ஒரு குடும்பத்தில் மூன்று பேருக்கு உட்பட்டவர்களுக்கு 2000 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் மூன்று நபர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு 2500 ரூபா பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment