ஜப்பானில் வானிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம்: எஸ்.பாலச்சந்திரன் பங்கேற்பு

385 0

ஜப்பான் நாட்டில் வானிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் வருகிற 27-ந்தேதி நடைபெறுகிறது. இதில் இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கலந்துகொள்கிறார்.

ஜப்பான் நாட்டில் வானிலை மாற்றம் குறித்த கருத்தரங்கம் வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. இதில் மாலத்தீவு, இலங்கை, இங்கிலாந்து, அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் பங்கு பெற இருக்கிறார்கள். இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கலந்துகொள்கிறார். இதற்காக அவர் நாளை(ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட்டு செல்கிறார். இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

ஜப்பானில் செண்டாய் பகுதியில் இந்த கருத்தரங்கு மாநாடு நடைபெறுகிறது. கடல் பகுதியில் உருவாகும் புயல் குறித்த வானிலை தொடர்பான விஷயங்கள் இந்த கருத்தரங்கில் பேசப்படும். இனிவரும் காலங்களில் புயல் வருவதை கண்டறிய என்ன மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்? என்பது குறித்தும் கலந்து ஆலோசிக்கப்படும்.

நமது வானிலை சம்பந்தப்பட்ட தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு இந்த கருத்தரங்கு மாநாடு பெரிதும் உதவியாக இருக்கும். கடந்த ஆண்டு(2016) டிசம்பர் மாதம் சென்னையில் ஏற்பட்ட ‘வார்தா’ புயலை நம்முடைய வானிலை ஆய்வு மையம் எப்படி கணித்தது? என்பது தொடர்பான தகவலை இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் எடுத்துரைக்க இருக்கிறார்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a comment