முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கடந்த 22 ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவால் கைது செய்யப்படவிருந்தும், பௌத்த பிக்குகள் சிலர் ஜனாதிபதியை சந்தித்த பின்னர் குறித்த கைது காலவரையறையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் நிதியை தவறாகப் பயன்படுத்தி, டி.ஏ.ராஜபக்ச நினைவிடத்தை அமைத்தார் என்ற குற்றசாட்டின் பேரில் நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 22ஆம் திகதி நிதி மோசடி விசாரணைப் பிரிவால் கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படவிருந்தார்.
என்றாலும் கடந்த 21ஆம் திகதி இரவு ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்ற பௌத்த பிக்குகள் சிலர் கோத்தாபய ராஜபக்ஷவை கைது செய்யவேண்டாம் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பிக்குகளின் சந்திப்பின் போது ஜனாதிபதி சாதகமான பதில் ஒன்றை வழங்கியதாகவும் தெரியவந்துள்ளதாக சகோதர மொழி பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
என்றாலும் எதிர்வரும் புதன்கிழமை கோத்தாபய ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் என, விசாரணைப்பிரிவின் தகவல்கள் தெரிவிக்கினறன. இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகள் தற்பொழுது இந்திய விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் நாடு திரும்பியதும் மேற்கொள்ளும் தீர்மானங்களிலே தங்கியுள்ளது.