2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணத்துடன் குடும்ப பெண் ஒருவர் இன்று (24.11) கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழான பொலிஸ் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், யாழ்ப்பாணம் கந்தர்மடம் பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்தே குறித்த பெண்ணை கைதுசெய்துள்ளனர்.
35 வயதுடைய 3 பிள்ளைகளின் தாயான குறித்த பெண்ணின் வீட்டில் இருந்து 2 கிலோ கேரளா கஞ்சா மற்றும் 60 ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளன.
அரியாலை பூம்புகார் பகுதியில் உள்ள நபர் ஒருவர் கேரளா கஞ்சாவை கொண்டு வந்து தருவதாகவும், கணவர் இல்லாத காரணத்தினால் தான் விற்பனை செய்வதாகவும் பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகளின் பின்னர் யாழ். நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுக்கவுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.