குற்ற விசாரணைகளுக்கான தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கான தெற்காசிய பிராந்திய மையமொன்றினை ஸ்தாபிப்பதற்கான உயர் மட்ட அதிகாரிகளின் கலந்துரையாடல் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவின் தலைமையில் இன்று கொழும்பில் இடம்பெற்றது.
பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மாலைத்தீவு, நேபாளம் மற்றும் இலங்கை உள்ளிட்ட 6 தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த விசேட நிபுணர்களின் பங்குபற்றலில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலை ஐக்கிய நாடுகள் சபையின் போதைப்பொருள் குற்றங்கள் பற்றிய அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.
குற்ற விசாரணை அதிகாரிகளின் சேவை சமூகத்திற்கு அத்தியாவசியமாக அமைவதுடன், நீதியை நிலைநாட்டவும் குற்றங்கள், இலஞ்சம் மற்றும் ஊழல் என்பவற்றை இல்லாதொழிக்கவும் இவர்களது சேவை மிக அவசியமாகும் என ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ இதன்போது குறிப்பிட்டார்.
அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டதன் பின்னர் இலஞ்சம், ஊழல் பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளும்போது பிரயோகிக்கப்படும் பல்வேறு அழுத்தங்கள் காரணமாக அவர்களது சேவை சவால் மிக்கதாகவும் கடினமானதாகவும் காணப்படுகின்றதென ஜனாதிபதியின் செயலாளர் சுட்டிக்காட்டினார்.
இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ள இந்த கலந்துரையாடலில், தெற்காசிய நாடுகளின் ஊடாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளை இல்லாதொழிப்பதற்கான இரகசிய தகவல் பரிமாற்றத்தை இலகுபடுத்தும் நோக்கில் தெற்காசிய பிராந்திய நிலையமொன்றினை ஸ்தாபித்தல் பற்றி ஆராயப்படவுள்ளது.