இலங்கையின் அரச ஊழியர்கள் தமிழர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் சிங்கள மொழியையும் சிங்களவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தமிழ் மொழியையும் கற்க வேண்டியது அவசியமாகும். அரச தொழிலுக்கு வர வேண்டும் என்ற எண்ணம் மாத்திரம் போதாது. அரச தொழில் ஒன்றில் நியமனம் பெற்றதன் பின் நாட்டில் பின்பற்றப்படும் அனைத்து மொழிகளையும் கற்றலும் அவசியமாகும் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
அரச கரும மொழிகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று முன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
தேசிய மொழிக்கொள்கை மற்றும் அது தொடர்பான சட்டங்கள் இலங்கை அரசியல் அமைப்பில் 1987 ஆம் ஆண்டு முதல் காணப்படுகிறது. ஆனால் அது நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. தற்போது நாட்டில் சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் தேசிய மொழிகளாகக் கருதப்படுகின்றன. ஆங்கிலம் பொது மொழியாகக் கருதப்படுகின்றது.
இலங்கையில் தற்போது மொழிக் கொள்கைச் சட்டம் வெளியில் இருந்து பார்க்கும்போது மிகவும் அழகாக தெரிகிறது. ஆனால் ஆழமாக சென்று நோக்கும்போது அவை பூச்சியமாகவே உள்ளன.
நாட்டிலுள்ள அனைத்து குடிமக்களுக்கும் எந்தவொரு அரச சேவை நிறுவனத்துக்கும் சென்று தனது தாய்மொழியில் எழுத்து மூலமாகவும் வாய்மொழி மூலமாகவும் பதிலைப் பெற்றுக் கொள்ளக்கூடிய உரிமை உள்ளது. ஆனால் அது நடைமுறையில் இல்லை. அரச ஊழியர்கள் எந்த மொழி சார்ந்தவர்களாக இருந்தாலும் தமிழ், சிங்களம் ஆகிய இரு மொழிகளையும் கற்க வேண்டும். அதற்கான சட்டங்களும் காணப்படுகின்றன. ஆனால் அவர்கள் அரச சேவைக்கு சென்றதன் பின்னர் மொழி சார் கற்கையை மறந்து விடுகின்றனர். இது அரசாங்கத்தை உறுதிப்படுத்தும் மொழிக் கொள்கைக்கு பாதகமாக அமைகின்றது.
எனவே இப்பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் முகமாக அடுத்த வருடம் முதல் அரசாங்க நிறுவனங்களில் மொழி அலுவலர்களை நியமிக்கும் திட்டம் எமது அமைச்சினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதன் மூலம் சிங்கள – தமிழ் மொழி தொடர்பாக அரச நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினைகளுக்கான இலகுவான செயற்றிட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் என்றார்.