பாராளுமன்ற உறுப்பினர்களின் தொலை பேசி உரையாடல்கள் வெளியாகியுள்ளமை யால் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் தாமதப்படுத்தப்பட்டுள்ளமை ஆகிய விடயங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக கட்சித்தலைவர்கள் கூட்டம் இன்று மாலை 5.30 இற்கு நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜெயசூரிய தலைமை யில் இன்று நடைபெறவுள்ள இக்கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது பிணைமுறி மோசடிகள் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவில் பேப்பச்சுவல் ட்ரசரீஸ்உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸுடன் தொலைபேசி உரையாடல்களை மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் கோப் குழுவினை பிரதிநிதித்துவப்படுத் தும் ஐவரின் பெயர்கள் பகிரங்கப்படுத்தப்பட்டமை தொடர்பில் அண்மைய நாட்களில் தொடர்ச்சியாக சபையில் ஆளும் எதிர்த்தரப்பு உறுப்பினர்களின் வெளியிடும் பரஸ்பர கருத்துக்கள் தொடர்பாக கவனம் செலுத்தி அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.
அதேநேரம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை திட்டமிட்டு தாமதமாக்கப்படுவதாக ஆளும் தரப்பில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், கூட்டு எதிர்க்கட்சி, ஜே.வி.பி., தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போன்ற தரப்புக்களும் சபையில் காட்டமான கருத்துக்களை வெளியிட்டு வருகின்ற நிலையிலும் அவ்விடயம் தொடர்பிலும் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை பிணைமுறி விவகாரம் தொடர்பில் தனது பெயருக்கு களங்கம் ஏற் பட்டுள்ளமை தொடர்பாக பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா, ஹெக்டர் அப்பு ஹாமி, ஹர்சன ராஜகருணா உள்ளிட்ட உறுப்பி னர்கள் சிறப்புரிமை பிரச்சினையை எழுப்பி யுள்ளனர்.