உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை இன்று வெள்ளிக்கிழமை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவுமான அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
தேர்தலை நடத்த விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எமது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும். ஜனாதிபதி சட்டத்தரணியாக இருந்தும் அமைச்சர் வேண்டும் என்றே தேர்தல் தாமதத்திற்கு வழிவகுத்துள்ளார். எனவே இனிமேலும் அமைச்சர் பைசர் முஸ்தபாவின் மீது நம்பிக்கை வைக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பாக பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் வைத்து நேற்று ஊடகவியலாளர்களுக்கு அறிவுத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நீதிமன்றத்தில் வர்த்தமானி அறிவுறுத்தல் தடை விதித்தமையின் ஊடாக உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பொறுப்பையும் கடமையையும் உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்பது உறுதியாகியுள்ளது.
அமைச்சரின் அதிகாரத்தின் கீழேயே எல்லை நிர்ணயம் தொடர்பான முறைப்பாடு குழுவினை அமைச்சர் பைசர் முஸ்தபா நியமித்துள்ளார். எனினும் அமைச்சர் தனக்குள்ள அதிகாரத்தை மீறி செயற்பட்டிருந்தால் அவ்வாறான வர்த்தமானியை ஒரு போதும் வெளியிட முடியாது. அமைச்சர் பைசர் முஸ்தபா தனது காரியத்தை உரிய முறையில் நிறைவேற்றவில்லை என்றே தோன்றுகின்றது.
இதன்படி இன்று வெள்ளிக்கிழமை அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளோம். எனவே தேர்தலை நடத்த விரும்பும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் எமது நம்பிக்கையில்லா பிரேரணைக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.
கூட்டு எதிரக்கட்சி நம்பிக்கையில்லா பிரேரணை சமர்ப்பித்தாலும் அவர்களது நிபந்தனை என்னவென்பது எமக்கு தெரியாது. எனினும் நாம் அமைச்சரின் குறைப்பாடுகளை இனங்கண்டுள்ளோம். இதன்படி எல்லை நிர்ணயம் தொடர்பான முறைப்பாடு குழுவினை நியமித்தார். அந்த குழுவின் ஊடாக அமைச்சர் அதிகாரத்தை மீறி செயற்பட்டுள்ளார். அவர் ஜனாதிபதி சட்டதரணியாவார். இதன் விபரீதங்களை அறிந்தும் அமைச்சர் பைசர் முஸ்தபா வேண்டும் என்றே இவ்வாறு செயற்பட்டுள்ளார். ஆகவே இந்த அமைச்சர் மீது இனிமேலும் நம்பிக்கை வைக்க முடியாது.
இதன்படி நீதிமன்றத்திலுள்ள வழக்கை மீளபெறவிடாத்து எந்த தருணத்திலும் தேர்தலை எதிர்பார்க்க முடியாது போகும். ஒருவேளை நீதிமன்ற வழக்கு தோல்வி கண்டால் மீண்டும் எல்லை நிர்ணயம் செய்ய வேண்டி வரும். ஆகவே இந்த வழக்கை வாபஸ் பெறுவதின் ஊடாக தேர்தலை உடன் நடத்த முடியும். மேலும் பழைய முறைமையின் பிரகாரம் தேர்தலை நடத்துவதாக இருந்தால் ஆரம்பித்தில் இருந்து சட்ட திருத்த செய்ய வேண்டும். எனவே இதுதான் தற்போது சிக்கலான நிலைமையாகும் என்றார்.