ஜிம்பாப்பே: உயிருக்கு உத்திரவாதம் அளித்ததால் அதிபர் பதவியிலிருந்து விலகினாரா முகாபே?

476 0

உயிருக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டதன் அடிப்படையிலேயே முகாபே அதிபர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆப்ரிக்க நாடான ஜிம்பாப்வேயில் ராபர்ட் முகாபே (93) 1980-ம் ஆண்டு முதல் அதிபராக பதவி வகித்து வந்தார். தனக்கு பின்னர் தனது மனைவியை அதிகாரத்திற்கு கொண்டு வர முயற்சித்த முகாபே, அதற்கு இடைஞ்சலாக இருந்த துணை அதிபர் நாங்காவை பதவி நீக்கம் செய்தார்.

ராணுவ தலைமை தளபதி ஜெனரல் சிவெங்கா, நீக்கப்பட்ட துணை அதிபர் நாங்காவாவுக்கு ஆதரவாக இருந்த நிலையில்,
கடந்த 15-ம் தேதி தலைநகர் ஹரரேவை ராணுவ பீரங்கிகள் சுற்றி வளைத்தன. ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது. முகாபேவை குறிவைத்து தான் ராணுவம் செயல்பட்டதாக கூறப்பட்டது.

அதிபர் முகாபேவுக்கு எதிராக ராணுவம் கிளர்ந்துள்ளதற்கு அந்நாட்டு மக்கள் ஆதரவு அளித்த நிலையில், முகாபே பதவி விலகவேண்டும் என ஆளும்கட்சி எம்.பி.க்கள் உள்பட அனைவரும் ஒருசேர போர்க்கொடி தூக்கினர்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் கூடிய பாராளுமன்ற சிறப்பு கூட்டத்தில், முகாபேவை பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை ஆளும்கட்சி எம்.பி.க்கள் தாக்கல் செய்து, அதன் மீது விவாதம் நடத்தினர். ஆனால், முகாபே தனது பதவியை ராஜினாமா செய்து விட்டதாக கூறிய சபாநாயகர், விவாதத்தை முடித்து வைத்தார்.

முகாபே பதவி விலகியுள்ள நிலையில், அனைவரும் எதிர்பார்த்த படி முகாபேவால் நீக்கப்பட்ட முன்னாள் துணை அதிபர் எம்மர்சன் நாங்காவா, அந்நாட்டின் புதிய அதிபராக நாளை பதவியேற்க உள்ளார்.

இந்நிலையில், முகாபே மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் குவிந்துள்ள நிலையில், அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என்று ஆளும்கட்சி சார்பில் உறுதியளிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது. முகபே மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் வாக்குறுதியின் அடிப்படையிலே முகாபே ராஜினாமா முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a comment