சிங்கப்பூரில் வசித்து வரும் இந்தியரிடம் நகை, பணத்தை கொள்ளையடித்த மற்றொரு இந்தியருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிங்கப்பூரில் வசித்து வருபவர் எலச்சூர் ஸ்ரீனிவாஸ் (51). இவர் கடந்த ஆண்டு மே மாதம் 25-ம் தேதி வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது டவ்னர் சாலையில் வந்தபோது சிலர் தன்னை பின்தொடர்வதாக உணர்ந்தார். அவருக்கு பின்னால் வந்த வெங்கடாசலபதி மற்றும் ஸ்ரீநாத் பாரி, ஹாசன் ஆகியோர் அவரை வழிமறித்தனர்.
அதன்பின்னர் ஸ்ரீனிவாசை அவர்கள் மரக்கட்டையால் சரமாரியாக தாக்கினர். அவரிடம் இருந்த பணம் மற்றும் நகைகள் என சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்களை கொள்ளையடித்துச் சென்றனர்.
இதுகுறித்து ஸ்ரீனிவாஸ் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஸ்ரீநாத்தை கைது செய்தனர். ஸ்ரீநாத்திடம் போதை மருந்து சோதனை நடத்தப்பட்டது. அதில் அவர் போதை மருந்து உட்கொண்டது உறுதியானது.
அவர்களிடம் இருந்து 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை, பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடந்து வந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஸ்ரீநாத்துக்கு 4 ஆண்டுகள் மற்றும் கூடுதலாக 6 மாதம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
கொள்ளையில் மூளையாக செயல்பட்ட வெங்கடாசலபதி (48), என்பவருக்கு 4 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், ஹாசன் (36) மீதான குற்றம் குறித்து விசாரணை நடந்து வருகிறது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.