பிலிப்பைன்ஸ் கடலில் விழுந்த அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ராணுவ விமானத்தில் பயணித்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மற்ற மூன்று பேரின் கதி என்னவென்று தெரியவில்லை.
பிலிப்பைன்ஸ் நாட்டின் ஒக்கினாவா தீவை ஒட்டியுள்ள கடல் பகுதி வழியாக அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான ஒரு ராணுவ விமானம் நேற்று பறந்து கொண்டிருந்தது. ஜப்பான் ராணுவத்துடன் இணைந்து நடத்தப்பட்ட வழக்கமான பயிற்சிக்கு பின்னர் அங்குள்ள அமெரிக்க கடற்படையின் ரொனால்ட் ரீகன் போர் கப்பலில் தரை இறங்குவதற்காக சென்ற அந்த விமானம் மதியம் சுமார் 2:45 மணியளவில் விமானத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக நிலை தடுமாறி ஒக்கினாவா தீவின் தென்கிழக்கே கடலில் விழுந்தது.
இவ்விபத்து பற்றி அறிய வந்த பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல் படையினர் மற்றும் அமெரிக்க கடற்படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 11 பேரை தேடும் பணியில் அவர்கள் தீவிரமாக ஈடுபட்டுனர். இந்த மீட்புப்பணியில் 8 வீரர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மற்ற மூன்று பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை அமெரிக்கா ராணுவத்தினரும், ஜப்பான் ராணுவத்தினரும் இணைந்து தேடி வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து அமெரிக்க ராணுவத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.