இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு ஜனவரியில் இந்தியா சுற்றுப்பயணம்!

323 0

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு வரும் ஜனவரி மாதம் 14-ம் தேதி முதல் 4 நாட்கள் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியா, இஸ்ரேல் நாடுகளிடையே நீண்ட காலமாக  தூதரக உறவு நீடிக்கிறது. எனினும், பாலஸ்தீன பிரச்சினை காரணமாக இந்திய பிரதமர்கள் யாரும் இஸ்ரேல் சென்றது இல்லை. கடந்த ஜூலை மாதம் இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அத்துடன் 80 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இஸ்ரேல் சென்ற இந்திய பிரதமர் என்ற பெருமையை பெற்றார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவை இந்தியாவிற்கு வரும்படி மோடி அழைப்பு விடுத்தார். அதனை ஏற்று இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு வரும் ஜனவரி மாதம் இந்தியாவில் 4 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

ஜனவரி 14-ம்தேதி இந்தியாவின் அகமதாபாத் வரும் நேதன்யாகுவை பிரதமர் மோடி வரவேற்கிறார். பின்னர் டெல்லி செல்லும் நேதன்யாகு ஜனவரி 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் அரசுத் துறை சார்ந்த கூட்டங்களில் கலந்துகொள்கிறார். அவரது பயணம் தொடர்பான விரிவான திட்டம் தயாராகி வருவதாகவும், இந்தியாவில் உயர்மட்ட தலைவர்களை அவர் சந்திக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் 2008ம் ஆண்டு தீவிரவாத தாக்குதல் நடந்த பகுதியான யூத சபாத் ஹவுசுக்கு ஜனவரி 17-ம் தேதி செல்கிறார். 18-ம் தேதி நாடு திரும்புகிறார்.

இந்தியா-இஸ்ரேல் இடையே தூதரக உறவுகள் 1992ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு இந்தியாவிற்கு வரும் இரண்டாவது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு ஏரியல் ஷாரோன் பிரதமராக இருந்தபோது 2003 ஆண்டு இந்தியாவிற்கு வந்தார்.

Leave a comment