இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்: தினகரன்!

358 0

அ.தி.மு.க. சட்ட விதிகளின் படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும் என டி.டி.வி.தினகரன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அ.தி.மு.க. (அம்மா) அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். விமான நிலையத்தில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் தினகரன் ஒரு ஓட்டலில் தங்கினார். அங்கு தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர் மாவட்ட பொருளாளர் சையது முஸ்தபா உள்பட சுமார் 100 பேர் டி.டி.வி.தினகரன் முன்னிலையில் கட்சியில் இணைந்தனர். இன்று அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் நடைபெறும் கட்சி நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.

முன்னதாக திருவானைக்காவலில் உள்ள மாநில அமைப்பு செயலாளர் மனோகரன் இல்லத்திற்கு வந்த அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் உங்களுக்கே கிடைக்கும் என எந்த நம்பிக்கையில் கூறுகிறீர்கள் என்று நிருபர்கள் கேட்டபோது, எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் சிறு, சிறு குழுக்கள் தான். அவர்கள் ஒன்றாக இணைந்ததால் எங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை.

அவர்களிடம் இருக்கும் பலர் பதவிக்காக மட்டுமே உள்ளனர். ஆனால் 90 சதவீதம் அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் இருக்கிறார்கள். எனவே அ.தி.மு.க. சட்டவிதிகளின் படி இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது வடக்கு மாவட்ட செயலாளர் சீனிவாசன், தெற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.இதையடுத்து அவர் அரியலூர் புறப்பட்டு சென்றார்.

Leave a comment