தமிழகத்தில் பா.ஜனதா காலூன்ற அவசியம் இல்லை: எச்.ராஜா

355 0

வருமானவரித்துறை சோதனை மூலம் தமிழகத்தில் பாரதிய ஜனதா காலூன்ற அவசியம் இல்லை என ஈரோட்டில் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் நடந்த பா.ஜ.க.பிரமுகரின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா வந்தார்.

அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்தியாவில் 18 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அந்த மாநிலங்களில் எந்த ஒரு மத பிரச்சனையும் ஏற்படவில்லை.

நடிகர் கமல்ஹாசன் போன்றவர்கள் பெரும்பான்மை சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசுவது கண்டிக்கத்தக்கது.

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு ஆதரவு தெரிவிப்பதன் மூலம் நடிகர் கமல்ஹாசன் இந்து மதத்தை இழிவுப்படுத்தும் அவரது நோக்கம் தெரிகிறது. கமல்ஹாசன் அரசியலுக்கு வந்தால் இந்து விரோத சக்தியை வலுப்படுத்தும்.

நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலை குறித்து திரைத்துறையை திருத்த முடியவில்லை. நாட்டை எப்படி திருத்துவார் கமல்ஹாசன்?‘பத்மாவதி’ திரைப்படத்தை ஆதரித்து பேசுபவர்கள் தேச பக்தனாகக்கூட இருக்க முடியாது. சித்தூர் ராணி பத்மினியின் கதை பத்மாவதி என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டு உள்ளது.

அந்த காலத்தில் மன்னர்கள் போரில் வெற்றி கொள்ளும் நாட்டின் அரண்மனையில் உள்ள பெண்களின் கற்பை சூறையாடுவார்கள். அப்போது பெண்கள் தங்களது மானத்தை காப்பாற்றி கொள்வதற்காக உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.

சித்தூர் மன்னர் இறந்த உடன் ராணி பத்மினி வீரத்துடன் போரிட்டார். அந்த போரில் அவர் தோல்வி அடைந்த பிறகு தனது மானத்தை காப்பாற்றி கொள்வதற்காக உயிரை மாய்த்து கொண்டார். அந்த ராணி பத்மினிக்கு ராஜஸ்தானில் பல இடங்களில் கோவில் கட்டி வழிபட்டு வருகிறார்கள்.

அந்த ராணியை மன்னருடன் டூயட் பாடும் வகையில் படம் இயற்றி இருப்பது அசிங்கப்படுத்தும் செயல். எனவே ராஜஸ்தான், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நடக்கும் வருமான வரித்துறை சோதனைக்கும் பா.ஜ.க மற்றும் மத்திய அரசுக்கு எந்தவித தொடர்பும் இல்லை. இதன் மூலம் பா.ஜ.க. தமிழகத்தில் காலூன்ற வேண்டி அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a comment