போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள்: தொ.மு.ச. பொருளாளர் தகவல்

417 0

ஜனவரி மாதத்தில் இருந்து புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும், போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்றும் தொ.மு.ச பொருளாளர் நடராஜன் கூறியுள்ளார்.

ஜனவரி மாதத்தில் இருந்து புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றும், போக்குவரத்து கழகங்களில் 13 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது என்றும் நடராஜன் கூறியுள்ளார்.

அவரிடம் மேலும் கேட்கப்பட்ட கேள்விகளும், பதில்களும் வருமாறு:-

கேள்வி:- தமிழகத்தில் எத்தனை அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன? அதில் எத்தனை பஸ்கள் தரமானதாக உள்ளன?

பதில்:- தமிழகத்தில் 2010-2011-ம் ஆண்டு 19 ஆயிரத்து 110 வழித்தடத்தில் 71 ஆயிரத்து 154 பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் 2015-2016-ம் ஆண்டு 23 ஆயிரத்து 78 பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. அவற்றில் 20 ஆயிரத்து 839 பஸ்கள் இயக்குவதற்கு முறையான தரமில்லை. 2012-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட பஸ்கள் தற்போது தன்னுடைய வாழ்நாளை கடந்து ஆபத்தான முறையில் இயக்கப்படுகின்றன.

கேள்வி:- பஸ்களின் வாழ்நாளை எவ்வாறு கணக்கிடுகிறீர்கள்?

பதில்:- 6 லட்சம் கிலோ மீட்டர் அல்லது 7 ஆண்டுகள் இதில் எது முதலில் வருகிறதோ அதுபடி குறிப்பிட்ட பஸ்களுக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. அப்படி பார்த்தால் தற்போது இயக்கப்படுவதில் ஆயிரம் பஸ்கள் மட்டுமே வாழ்நாள் தகுதியுடன் ஓடுகின்றன. மீதம் உள்ள அனைத்து பஸ்களும் இயக்குவதற்கு தரம் இல்லாதவையாகும்.

கேள்வி:- பஸ்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் முறையாக வாங்கப்படுகிறதா?

பதில்:- ஏற்கனவே வாங்கிய உதிரி பாகங்களுக்கு வழங்க வேண்டிய பாக்கி அதிகமாக உள்ளது. இதனால் உதிரிபாகங்களை மாற்றி போட்டு பஸ்களை முடிந்த வரை இயக்கி வருகிறோம்.

கேள்வி:- எத்தனை பள்ளி மாணவர்களுக்கு இலவச பயண அட்டை மூலம் சேவை அளிக்கப்படுகிறது?

பதில்:- 35 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பயண அட்டை மூலம் சேவை அளிக்கப்படுகிறது. இதுதவிர சென்னை மாநகரில் 3 லட்சம் முதியோர்களுக்கு சலுகை கட்டணம், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள், பத்திரிகையாளர்கள், மொழிப்போர் தியாகிகள், சுதந்திர போராட்ட வீரர்கள், புற்றுநோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், நாடக கலைஞர்கள், கிராமிய கலைஞர்களுக்கும் சேவை அளிக்கப்பட்டு வருகிறது.

கேள்வி:- சலுகை கட்டண சேவை என்று கூறுகிறீர்கள், இவை அனைத்துக்கும் அரசு உரிய தொகையை போக்குவரத்து கழகத்துக்கு செலுத்தி வருகிறதே?

பதில்:- பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சேவையில் ஆண்டுக்கு 200 வேலைநாட்கள் என்று கணக்கிடப்படுகிறது. அதிலும் 20 சதவீதம் மாணவர்கள் பள்ளிகளுக்கு வருவதில்லை என்று கூறப்பட்டு, 80 சதவீத மாணவர்கள் எண்ணிக்கையை கணக்கிட்டு கூறினாலும், அரசு 56 சதவீத தொகையை தான் போக்குவரத்து கழகத்துக்கு அளிக்கிறது.

அதுவும் ஜனவரி மாதம் சேவை அளித்தால் அதற்கான தொகையை டிசம்பர் மாதம் தான் அளிக்கிறது. ஆனால் போக்குவரத்து கழகங்கள் 18 முதல் 22 சதவீதம் வட்டியில் டீசல் கொள்முதல் செய்கிறது. அப்படி பார்த்தால் அரசு அளிக்கும் தொகை வட்டிக்கு தான் செலுத்தி வருகிறோம். டீசல் வாங்கியதற்கான அசல் தொகை செலுத்த முடியாத நிலையில் இருந்து வருகிறோம்.

கேள்வி:- அரசு பஸ்களில் பயணிகள் குறைந்ததற்கு யார் காரணம்?

பதில்:- மாநகரங்கள் உள்பட மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் கால் டாக்சிகளை ஊக்குவிப்பது மற்றும் நாகர்கோவில், கோவை, ஈரோடு, கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு அந்தந்த போக்குவரத்து கழகங்கள் பஸ்களை இயக்கி வந்தன. ஆனால் தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சென்னைக்கு விரைவு போக்குவரத்து கழகம் மட்டும் இயக்கினால் போதும், அப்பகுதிகளில் உள்ள போக்குவரத்து கழகங்கள் இயக்க வேண்டாம் என்று அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

ஆனால் விரைவு போக்குவரத்து கழகத்திற்கு பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் எண்ணிக்கையில் பஸ்கள் வழங்கவில்லை. மாறாக இந்த பாதைகளில் ஆம்னி பஸ்களுக்கு கதவு முற்றிலும் திறந்துவிடப்பட்டுள்ளது.

கேள்வி:- போக்குவரத்து கழகங்களில் எத்தனை பேர் பணியாற்றுகின்றனர். எவ்வளவு காலியிடங்கள் உள்ளன?

பதில்:- பணி ஓய்வு, இறப்பு மற்றும் விருப்ப ஓய்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஆண்டுக்கு 5 ஆயிரத்து 500 ஊழியர்கள் போக்குவரத்து கழகத்தில் இருந்து வெளியேறுகின்றனர். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து புதிதாக ஆட்கள் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் சராசரியாக தற்போது 13 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

கேள்வி:- ஊழியர்கள் நலனில் எவ்வாறு அக்கறை செலுத்தப்படுகிறது?

பதில்:- ஊழியர்களை பொறுத்தவரை கடந்த 2012-ம் ஆண்டு ஓய்வு பெற்றவர்கள் வரை தான் பி.எப். தொகை மற்றும் பென்சன் ஒப்படைப்பு தொகையும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஓய்வு பெற்றவர்களுக்குரிய தொகைகள் வழங்காததால் அவர்களின் வாரிசுகளுக்கு திருமணம், கல்வி மற்றும் வாழ்க்கையை நடத்த திண்டாடி வருகின்றனர். ஓய்வூதியமும் 10-ந் தேதி தான் வழங்கும் அவல நிலையும் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Leave a comment