இலங்கையில் பொழியவுள்ள கடும் மழை; வெள்ள எச்சரிக்கையும் விடுப்பு

294 0

வட மற்றும் மத்திய மாகாணங்களில் அடுத்த சில நாட்களுக்குள் பெய்யவுள்ள கடும் மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வடகீழ் பருவ மழை கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளுக்கும் கிடைத்து வருகிறது. குறிப்பாக நீரேந்துப் பகுதிகளில் பெய்துவரும் மழையால் நீர்த் தேக்கங்களும் நிரம்பி வருகின்றன.

என்றபோதும், அந்தமான் கடற்பகுதியில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் இலங்கை நோக்கி நகர்வதால், எதிர்வரும் 26ஆம் திகதி வரை இலங்கையில் கடுமையான மழையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

தாழமுக்க நகர்வினால் வட மாகாணம் மற்றும் மத்திய மாகாணத்தில் கடும் மழை பெய்யக் கூடும் என்றும் சில சமயங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அளவுக்கு மழை பொழிவு இருக்கும் என்றும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதிவரை கிழக்குக் கரையோரப் பகுதிகளில் கடல் சீற்றம் இருக்கலாம் என்றும் இதனால் மீனவர்கள் மற்றும் கரையோரப் பகுதி மக்கள் இதுபற்றி முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a comment