ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையத்தில் அரசு மருத்துவர்கள் இரண்டு பேர் இன்று ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. நீதிபதி ஆறுமுகசாமி நேற்று தனது நேரடி விசாரணையை தொடங்கினார்.
முதன்முதலாக பிரமாண பத்திரம் அளித்த டாக்டர் சரவணன் நேற்று ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெ.தீபா, சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, டிராபிக் ராமசாமி ஆகியோரும் ஆணையத்தில் மனுக்களை அளித்தனர்.
இதன்பின்பு நீதிபதி ஆறுமுகசாமி நிருபர்களிடம் கூறுகையில், 2 அரசு மருத்துவர்களுக்கு சம்மன் அனுப்பி உள்ளதாகவும், அவர்கள் 23-ந் தேதி (இன்று) காலை 10.30 மணிக்கு ஆஜராக அறிவுறுத்தி உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதன்படி, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயணபாபு மற்றும் மருத்துவர் மயில்வாகனன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜராகினர். அப்போது நீதிபதி ஆறுமுகசாமி கேட்ட கேள்விகளுக்கு இருவரும் விளக்கம் அளித்தனர்.
இதேபோல் திமுகவை சேர்ந்த மருத்துவர் சரவணன் இன்று மீண்டும் ஆஜராகி சில ஆவணங்களை வழங்கினார்.