இலங்கையில் பொருளாதாரத்திற்காக தமது உதிரம், வியர்வையைக் கொட்டி உழைத்து இறுதியில் தேயிலைச் செடிக்கே உரமாகிறார்கள் பெருந்தோட்ட தமிழ் மலையகத் தொழிலாளர்கள் என தெரிவித்துள்ள அமைச்சர் லக் ஷ்மன் கிரியெல்ல,150 வருடங்களுக்கு முன் இந்தியாவிலிருந்து தேயிலைத் தொழிலுக்காக வெள்ளைக்காரர்களால் தமிழ் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் இங்கு வரவழைக்கப்பட்டார்கள். இன்று இந்திய வம்சாவளியினர் இலங்கையர்களாக மாறிவிட்டனர். எனவே நாம் அவர்களை எம்மவர்களாக ஏற்றுக்கொண்டு எமது பொறுப்புகளைச் செய்ய வேண்டும் என்று உயர்கல்வி நெடுஞ்சாலைகள் அமைச்சரும் சபை முதல்வருமான லக் ்ஷ்மன் கிரியெல்ல மேலும் தெரிவித்தார்.
இது தொடர்பாக அமைச்சர் கிரியெல்ல மேலும் தெரிவித்ததாவது; மலையக பெருந்தோட்ட தமிழ் மக்கள் நமது மக்கள். அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த வேண்டியது எமது பொறுப்பாகும்.
அந்த அடிப்படையில் அம்மக்களுக்கு இலவசமாக 07 பேர்ச் காணியும் வீடும் அமைத்துக் கொடுக்க வேண்டும் என நான் அமைச்சரவைக்கு முன்வைத்த பிரேரணை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இக்கடமையை மலையக அமைச்சர்களுடன் இணைந்து முன்னெடுப்பேன்.
மேலும் தனது உயிரை தேயிலைச் செடிகளுக்கு உரமாக்கும் பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களின் வெள்ளைக்காரன் கட்டிய லயன் காம்பரா வீட்டுத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்.
இவ்வளவு காலமும் இலங்கையில் ஐ.தே.கட்சி – ஐ.தே. முன்னணி என பிரித்து முரண்பாடுகளுக்கு மத்தியில் அரசியல் நடத்தி வந்தோம். இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்து இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து நல்லாட்சி ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே நிச்சயம் மலையகத்தில் விடியல் பிறக்கும். லயன் காம்பராக்கள் தனித்தனி வீடுகளாக, கிராமங்களாக மாறும்.
பெருந்தோட்ட தமிழ் மக்களுக்கு வைத்தியசாலை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படும். அதற்காக வெளிநாட்டு நிதி நிறுவனங்களின் உதவிகளும் பெற்றுக் கொள்ளப்படும்.
இன்று மலையகத்தில் கல்வியில் மறுமலர்ச்சி தோன்றியுள்ளது. சட்டத்தரணிகள், டாக்டர்கள், அறிவு ஜீவிகள் என பலர் தோன்றியுள்ளனர். ஆனால் அனைவரும் மறைமுகமாக தம்மை சமூகத்தில் அடையாளப்படுத்திக் கொள்ளாது மலையகத்தான் எனக்கூற வெட்கப்பட்டு மறைந்து வாழ்கிறார்கள்.
இதிலிருந்து அவர்களை வெளியே கொண்டுவந்து சமூகத்திற்கு அடையாளம் காட்ட வேண்டும். இதுபோன்று மேலும் பலரை உருவாக்க வேண்டும். இதனைச் செய்ய வேண்டியது அரசியல் வாதிகளான எமது பொறுப்பாகும். இதனை நிச்சயம் நான் செய்வேன்.
கடந்த காலங்களில் பெருமளவிலான இளைஞர் – யுவதிகள் பெருந்தோட்டங்களை விட்டு வெளியேறி கொழும்பில் தொழில் புரிகின்றனர். சிலர் தொழிலில் கொடி கட்டிக் பறக்கின்றனர். கொழும்பிலேயே திருமணம் முடித்து நன்றாக வாழ்கிறார்கள்.
சிலர் சம்பாதித்து பணத்தைச் சீரழிக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து புனர்வாழ்வளித்து மலையக சமூகத்தை கட்டியெழுப்ப வேண்டும். இந்தியாவுக்குச் செல்ல விருப்பமானோரை அங்கு அனுப்பி வைத்தும், இலங்கையில் தங்கியிருக்க விரும்புவோரை இங்கு வைத்தும் பராமரித்து அவர்களது வாழ்வில் விடியலை ஏற்படுத்த வேண்டும் என்றார்.