உள்ளாட்சி தேர்தலை நடத்தாததால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ரூ.3500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவி காலம் 2016 அக்டோபர் மாதம் நிறைவடைந்ததை தொடர்ந்து தனி அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 12 மாநகராட்சிகள், 124 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள், 12,528 இதர பஞ்சாயத்துகள் உள்ளன. மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் பதவிகாலம் முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு வருடமாக தேர்தல் நடத்தப்படவில்லை.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் மக்களுக்கு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நிறைவேற்றப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கினாலும் ஒருசில திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி கிடைக்கிறது.
மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் கீழ் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. நகர் பகுதிகளுக்கு தேவையான வழிகளை மேம்படுத்துவதற்கு மத்திய அரசின் பங்களிப்பு அவசியமாகிறது.
அதன் அடிப்படையில் தமிழகத்திற்கு ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு நிதி ஒதுக்குகிறது. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நடக்காததால் அந்த நிதி உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்காமல் போய்விட்டது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் ரூ.3500 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
பெருநகர சென்னை மாநகராட்சிக்கு மட்டும் ரூ.709 கோடி மத்திய அரசின் திட்டப்பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மற்ற மாநகராட்சிகளுக்கு ரூ.341 கோடி பணிகளும், நகராட்சிகளுக்கு ரூ.402 கோடி வளர்ச்சி பணிகளும், பேரூராட்சிகளுக்கு ரூ.2045 கோடி பணிகளும் பாதிக்கப்பட்டு இருப்பதாக தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசின் அடல் மிஷன் திட்டத்தின் கீழ் 12 மாநகராட்சிகள் மற்றும் தாம்பரம், காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கும்பகோணம், ராஜபாளையம், ஆவடி, புதுக்கோட்டை, ஓசூர், நாகர்கோவில், ஆம்பூர், காரைக்குடி, பல்லாவரம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ராமேசுவரம் நகராட்சிகளுக்கு குடிநீர் திட்டங்களை நிறைவேற்ற 35 சதவீத மானியம் வழங்குகிறது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, பஞ்சாயத்து ஆகியவற்றில் உள்ள மக்கள்தொகை அடிப்படையில் மத்திய அரசிடம் இருந்து நிதி பெறப்படுகிறது. உள்ளாட்சி பிரதிநிதிகள் இருந்தால் இந்த நிதியை எளிதாக பெற முடியும். தேர்ந்து எடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இல்லாததால் நிதியை பெறுவதில் முட்டுக்கட்டை ஏற்படுகிறது என்றார்.
உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் பெரும்பாலான பஞ்சாயத்துகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக 5000 பஞ்சாயத்துகளில் வங்கி கணக்குகளில் பணமே இல்லை என்பதும் தெரிய வந்துள்ளது.