அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என கூறுவது தவறு. இரு அணிகளும் மனமாற, உளமாற இணைந்தே செயல்பட்டு வருகிறது என பொன்னையன் கூறியுள்ளார்.
தூத்துக்குடி கோரம்பள்ளம் அரசு தொழிற்பயிற்சி பள்ளி மைதானத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று மாலை 3 மணிக்கு நடக்கிறது. இதையொட்டி செய்தி மக்கள் தொடர்துறை சார்பில் விழா நடைபெறும் மைதானத்தில் எம்.ஜி.ஆர். வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சி அரங்கை இன்று காலை அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன் ஆகியோர் திறந்து வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சேவூர் ராமச்சந்திரன், காமராஜ், கடம்பூர் ராஜு, ராஜலெட்சுமி, கருப்பணன், அன்பழகன் மற்றும் மூத்த தலைவர் சி. பொன்னையன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அ.தி.மு.க. மூத்த தலைவரும், ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த சி.பொன்னையன் நிருபர்களிடம் கூறுகையில், அ.தி.மு.க. அணிகள் இணைந்தாலும் மனங்கள் இணையவில்லை என கூறுவது தவறு. எம்.ஜி.ஆர்- ஜெயலலிதா ஆகியோர் ஆசீர்வாதத்தால் இரு அணிகளும் மனமாற, உளமாற இணைந்தே செயல்பட்டு வருகிறது என்றார்.
இதே போல் அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, அன்பழகன் ஆகியோர் கூறுகையில், இரு அணியினரும் ஒற்றுமையுடன், எழுச்சியுடன் இந்த விழாவை கொண்டாடி வருகிறோம். அ.தி.மு.க. தொண்டர்களின் மனமும் ஒன்றாகதான் இருக்கின்றன என்றனர்.