பிரதமர் பதவியை ராஜினாமா செய்த லெபனான் பிரதமர் நாடு திரும்பினார்

292 0

உயிருக்கு ஆபத்து இருப்பதால் லெபனான் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த சாட் ஹரிரி இன்று நாட்டின் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதாக நாடு திரும்பினார்.

லெபனான் பிரதமர் சாட் அல் ஹரிரி கடந்த 3-ம் தேதி திடீரென சவுதி அரேபியாவுக்குச் சென்றார். பின்னர் மறுநாள் தொலைக்காட்சியில் தோன்றி பேசிய அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக அறிவித்தார். ஆனால், தொடர்ந்து அவர் சவுதி அரேபியாவிலேயே தங்கியிருக்கிறார். பதவியை ராஜினாமா செய்ய கட்டாயப்படுத்தப்பட்டதாக அவருக்கு நெருக்கமான லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஆனால் அவரது ராஜினாமாவை லெபனான் அதிபர் மைக்கேல் ஆன் ஏற்கவில்லை. அவர் உடனடியாக நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்று அதிபர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கூறி வந்தனர். சவுதியில் அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என்றும் அதிபர் கூறியிருந்தார்.

இதற்கிடையே ஹரிரிக்கு பிரான்ஸ் நாடு அழைப்பு விடுத்தது. லெபனான் அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தி ஹரிரியை மீண்டும் பிரதமர் பதவியில் அமர்த்த பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முயற்சித்துவரும் நிலையில் சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட சாட் ஹரிரி பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் சென்றார். வரும் 22-ம் தேதி நடைபெறும் லெபனான் சுதந்திர தின விழாவில் பங்கேற்பதற்காக நிச்சயமாக நாடு திரும்புவேன் என அவர் லெபனான் அதிபரிடம் உறுதி அளித்திருந்தார்.

இந்நிலையில், இன்று லெபனானில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால் அதில் கலந்துகொள்வதற்காக சாட் ஹரிரி இன்று லெபனான் நாட்டுக்கு திரும்பினார். லெபனான் திரும்பிய ஹரிரி அவரது தந்தையும், முன்னாள் பிரதமருமான ரபிக் ஹரிரியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.

Leave a comment