வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலமைகள் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளனர்.
கூட்டமைப்பின் ஊடக அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர் கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தலைமையிலான குழுவினர் நேற்று பிரதமரை சந்தித்துள்ளனர்.
இதன்போது, வடக்கு கிழக்கில் இனரீதியான மாற்றங்கள் உருவாக்கும் நோக்கில் இடம்பெறும் பல்வேறு நடவடிக்கைகள் தொடர்பில் பிரதமரின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்கில் நிலவும் வேலையின்மை பிரச்சினை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கிலே சனத்தொகை பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு தடையாக அமையும்.
இந்த நிலையில் அது தொடர்பில் தமது விசேட அவதானம் செலுத்தப்படும் என பிரதமர் உறுதியளித்ததாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.