தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது தவறா?

12239 0

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. தேசியக் ​கொடியை ஏற்ற மறுத்தது தவறா? புதிய அரசியலமைப்பு புதிய தேசியக் கொடி அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தற்போது சர்ச்சையில் எழுந்துள்ள தேசியக்கொடி விவகாரம் தொடர்பாக இன்று (21.11) யாழில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து வௌியிட்ட அவர்,

வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்ற மறுப்புத் தெரிவித்த விடயம் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஓன்றுமில்லாத விடயத்தை பெரிய விடயமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் தெரிவிக்கின்றார்கள். இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தவர்கள் இலங்கைப் பாரளுமன்றத்தில் இருந்தவாரே பிரிட்டிஷிற்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.

இவ்வாறான நிலமையில் தான் அரசியலமைப்பையும், தேசிய கொடியையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசியக் கொடியை அவமதிக்கவில்லை. தேசியக் கொடியை கீழே போட்டு மிதிக்கவில்லை. அவர் தேசிய கொடியை ஏற்ற மறுத்துள்ளார். அதை சர்ச்சையாக்கி, சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறுகின்றார்கள். அந்த சட்ட நடவடிக்கை என்ன என்பதனைப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் 50 மாநில அரசுகள் இருக்கின்ற இடத்தில் கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய கொடியை எரிப்பதற்கு உரிமை உள்ளதென அந்த நாடு ஏற்றுக்கொண்டுள்ளது. தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறாக தெரியவில்லை. தேசிய கொடியை ஏற்ற மறுத்தது என்பது தான் தவறா?

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு புதிய தேசிய கொடி அமைக்கப்பட வேண்டும். அது வரை இந்த சர்ச்சைகள் நீடிக்கும். 10 லட்சம் பேரின் குடியுரிமையை பறித்தீர்கள். தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்தீர்கள். சிங்கள குடியேற்றங்களைச் செய்தீர்கள். அரசியலமைப்பின் மூலம் தொடர்ந்தும் எமது உரிமைகளைப் பறித்தீர்கள். ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாக இதைப் பார்க்க வேண்டும்.

சிங்கள மக்கள் இதைப் பிரச்சினையாக்கினார்களாக இருந்தால், இந்தப்பிரச்சினை இன்னும் பெரிய பிரச்சினையாக மாறும். புதிய அரசியலமைப்பு, புதிய தேசியக்கொடியே ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கை என்றார்.

Leave a comment