பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இன்று உயர்நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராகியுள்ளார்.
நீதிமன்றத்தை அவமதித்த விவகாரம் தொடர்பில், மாகல்கந்த சுதந்த தேரர் மற்றும் ஓய்வு பெற்ற விமானப்படை அதிகாரி ஒருவரும் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளுக்கு பதிலளிக்கவே அவர் இவ்வாறு நீதிமன்றம் சென்றுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 21ம் திகதி ஊடகங்களிடம் கருத்து வௌியிட்ட ரஞ்சன், இந்த நாட்டில் பெரும்பாலான சட்டத்தரணிகள் ஊழல்வாதிகள் என குறிப்பிட்டுள்ளதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இவ்வாறு கூறியமையானது, மக்களுக்கு சட்டம் தொடர்பில் இருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க வாய்ப்புள்ளதாகவும் மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதனால், நீதிமன்றத்திற்கு அபகீர்த்தி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
இதற்கமைய, குறித்த மனுவை ஆராய்ந்த உயர்நீதிமன்றம், கடந்த ஒக்டோபர் 25ம் திகதி அவரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஆஜரான அவரை மீண்டும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.