மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான ரூ.58 கோடி மதிப்பிலான இடத்தை தனியாருக்கு பட்டா மாறுதல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஆண்டு வந்த மன்னர்கள் நிலங்களை தானமாக எழுதி வைத்தனர். இதனால் மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, திண்டுக்கல், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை உள்பட பல மாவட்டங்களில் பல ஆயிரம் ஏக்கர்கள் கோவிலுக்கு சொந்தமாக உள்ளது.
இதேபோல மதுரை சொக்கிகுளம் பி.டி.ஆர். ரோட்டில் ஒரு ஏக்கர் 88 செண்ட் நிலம் உள்ளது. இதன் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.58 கோடி ஆகும்.
இந்த நிலத்தை புதுக்கோட்டையை சேர்ந்த வெள்ளைச்சாமி பல்லவராயன் மகன் ராஜேந்திரன் உள்பட அவரது வாரிசுகள் 10 பேர் தங்களுக்கு சொந்தமானது என கூறி மதுரை வடக்கு தாலுகாவில் ஆவணங்கள் தாக்கல் செய்தனர். இது தொடர்பாக அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் அரசன் விசாரித்து பட்டா மாறுதல் செய்யும்படி தாசில்தார் அன்பழகனுக்கு தகவல் தெரிவித்து அந்த இடத்தை வெள்ளைச்சாமி பல்லவராயனின் மனைவி ராமாயி, மகள்கள் செந்தமிழ் செல்வி, பிரேமா, ஜோதி, சீதா, மகன்கள் ராஜ்குமார், முத்துராமசாமி, ராஜேந்திரன் உள்பட 10 பேருக்கு பட்டா மாறுதல் செய்திட அறிக்கை சமர்ப்பித்தார்.
இந்த அறிக்கையின் அடிப்படையில் செந்தமிழ் செல்வி, ராஜேந்திரன் உள்பட 10 பேர்களுக்கும் பட்டா மாறுதல் செய்து தாசில்தார் அன்பழகன் பட்டா நகல் வழங்கினார்.
இந்த மோசடி பற்றி மதுரை மீனாட்சி அம்மன் கோவில் இணை ஆணையர் நடராஜனுக்கு தெரியவந்தது. இது தொடர்பாக அவர் நேற்று மாவட்ட கலெக்டர் வீரராகவராவிடம் புகார் மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி ஆர்.டி.ஓ. செந்தில்குமாரிக்கு உத்தரவிட்டார். அவர் தீவிர விசாரணை நடத்தியதில் தவறாக 10 பேருக்கு பட்டா மாறுதல் செய்தது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து கிராம நிர்வாக அலுவலர் அரசன் சஸ்பெண்டு செய்யப்பட்டார். பட்டா மாறுதல் உத்தரவு வழங்கிய தாசில்தார் அன்பழகனுக்கு குற்ற குறிப்பாணை வழங்கப்பட்டுள்ளது. இதையொட்டி இருவரிடமும் விசாரணை நடந்து வருகிறது.