தகுதிநீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான 7 வழக்குகள் மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் 24-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.
டிடிவி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு, குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமைக் குழு நோட்டீஸ் அனுப்பியதற்கு விளக்கம் கேட்டு தொடரப்பட்ட வழக்கு, பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநருக்கு உத்தரவிடக்கோரும் வழக்கு, சட்டமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பில் முதல்வர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தமாக விசாரிக்கப்படுகிறது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு விசாரித்து வருகிறது.
கடந்த 16-ம் தேதி இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தகுதி நீக்கம், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான 7 வழக்குகளில் சில வழக்குகள் விசாரணைக்கு உகந்ததல்ல என அரசு வழக்கறிஞர் வாதிட்டார். டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞரும் வாதத்தை முன்வைத்தார். இதையடுத்து வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி தினகரன் தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி நீண்டநேரம் தனது வாதத்தை முன்வைத்தார். தங்கள் தரப்பு எம்.எல்.ஏ.க்கள் முதல்வருக்கு எதிராக மட்டுமே புகார் கொடுத்ததாகவும், கட்சி மாறாதபோது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
முதல்வர் தரப்பு மற்றும் டிடிவி தரப்பு வாதங்களை கேட்டபிறகு விசாரணையை வரும் 24-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.