தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் ஆய்வு பணியில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை என ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது.தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சமீபத்தில் கோவை சென்றபோது, மக்கள் நலத்திட்ட பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதற்கு அரசியல் கட்சிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர். ஆளுநரின் ஆய்வு மாநில சுயாட்சிக்கு எதிரானது என்றும், மத்திய அரசின் தூண்டுதல் காரணமாக தமிழகத்தில் அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.
ஆளுநரின் இந்த பணிகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், இதுபற்றி ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ஆளுநரின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசியல் அமைப்பு சட்டத்தின் அடிப்படையிலேயே ஆளுநர் செயல்பட்டிருக்கிறார். மக்களின் பிரச்சினைகளை அறிந்து கொள்ள ஆய்வுக்கூட்டம் உதவியது. இதில் அரசியல் உள்நோக்கம் எதுவும் கிடையாது. வளர்ச்சிப் பணியில் மாநில அரசுக்கு ஒத்துழைக்கவே ஆய்வுப் பணியை மேற்கொண்டார். எந்த விதத்திலும் அழுத்தம் தரப்பட்டு ஆய்வு நடத்தப்படவில்லை. மக்கள் நல திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து நிதி பெறவும் ஆய்வுக் கூட்டம் பயன்படும்.
அசாமில் ஆளுநராக இருந்தபோதும் பல மாவட்டங்களில் ஆய்வு கூட்டம் நடத்தி உள்ளார். அவர், அரசியலில் ஈடுபடுகிறார் என்பது அடிப்படையற்ற குற்றச்சாட்டு. மத்திய அரசின் தூண்டுதலின்பேரில் அரசியலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டுவது துரதிர்ஷ்டவசமானது.
கோவையில் ஆய்வு மேற்கொண்டது போன்ற ஆய்வு உள்ளிட்ட பணிகள் தொடரும். ஆளுநரின் நடவடிக்கைக்கு அரசியலமைப்பு சட்டத்தில் தடை எதுவும் இல்லை. அவரது பணிகளை பல்வேறு அமைச்சர்கள் பாராட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.